பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

ஆனால் இறைவனிடம் ஈடுபட்ட உள்ளங்களில் இறைவனோடு தொடர்புடைய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கும். இரவிலே துயிலும்போது காணும் கனாக்களில் இறைவனோடு தொடர்புடைய காட்சிகளே தோன்றும். பகலில் உண்டாகும் சிந்தனைகளிலும் கற்பனைகளிலும் இறைவனுடன் தொடர்புடைய காட்சிகளே வரும்.

காரைக்கால் அம்மையாருடைய சிந்தனைகளும், கற்பனைகளும் அத்தகையனவே. இதுவரையில் நாம் பார்த்த பாடல்களில் அப்படி அமைந்த கற்பனைகளையும், அவற்றிலிருந்து எழுந்த விசித்திரமான கேள்விகளையும் பார்த்தோம்.

இறைவன் திருமுடிமேல் அணிந்த சந்திரனைப் பற்றி எண்ணும்போது அம்மையாருக்கு முன்னே சொன்ன எண்ணங்கள் தோன்றுகின்றன.

இறைவனையே நோக்கி ஒரு வினாவை எழுப்புகிறார்.

“தேவரீருடைய திருமுடிமேல் இருக்கும் சந்திர்ன் சூரியனுக்குச் சமானமாகப் பிரகாசிக்குமோ?” என்று கேட்கிறார்.

'பார்ப்பதற்கு அழகான வடிவை உடையது சூரியன். அதுவும் காலை நேரத்தில் கதிரவன் உதயமாகும் போது பார்த்தால் கண் கொள்ளாத காட்சியாக இருக்கும். அந்தச் செங்கதிருக்கு மாறாகச் சந்திரன் தன் ஒளியை வீசுமோ? பகல் நேரத்தில் வானத்தில் நெடிது உலவி அந்தச் சந்திரனுடைய கதிர்கள் எறிக்குமோ?——இவ்வாறு கேட்கிறார்.

வடிவுடைய செங்கதிர்க்கு
மாறாய்ப் பகலே
நெடிதுஉலவி நின்று எறிக்கும்
கொல்லோ?

பகலில் ஒளி தருவதும் நீண்ட நேரத்தில் வானத்தில் உலாவுவதும் வானத்தில் நாம் பார்க்கும் சந்திரனுக்கு இல்லை.