பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

“நின் திருமுடிமேல் உள்ள திங்களின் நிலா, சூரியனைப் போல, பகலிலும் பிரகாசிக்குமா? என்று அம்மையார் கேட்கிறார்.

வடிவுடைய செங்கதிர்க்கு
மாறாய்ப் பகலே
நெடிது லவி நின்றுஎறிக் கும்
கொல்லோ?—கடிஉலவு
சொல்முடிவுஒன்று இல்லாத
சோதியாய்! சொல்லாயால்
நின் முடிமேல் திங்கள் நிலா.

(புதுமை சேர்ந்த, சொல்லுக்கு முடிவு ஒன்றும் இல்லாத சோதியாக நிற்கும் எம்பெருமானே! நின்னுடைய திருமுடியின் மேல் உள்ள திங்களின் ஒளியானது, வடிவழகுடைய செந்நிறமுள்ள சூரியனுக்கு எதிராகப் பகலில் நீண்டு உலவி நின்று ஒளிவீசுமா? இதைச் சொல்வாயாக.

வடிவு—அழகுருவம். செங்கதிர்——கதிரவன். மாறாய்——எதிராக; ஒப்பாக என்பதும் ஆம். எறிக்கும்—ஒளி வீசும், கடி—புதுமை; கடியுலவு சோதியாய், சொல்முடிவு ஒன்று இல்லாத சோதியாய் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். நிலா எறிக்கும் கொல்லோ?)

அம்மையார் கெஞ்சினாலும், கொஞ்சினாலும், தத்துவத்தைச் சொன்னாலும், வருணித்தாலும், விசித்திரமாக எண்ணமிட்டாலும், ஆழ்ந்து சிந்தித்தாலும் யாவும் சிவபெருமானைப் பற்றியனவாகவே இருக்கும். இந்தப் பாட்டு விசித்திரமான எண்ணங்களில் ஒன்று.

இது அற்புதத் திருவந்தாதியில் 63-ஆம் பாட்டு.