பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65. திரியும் பாம்பு


காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வினவுவது போல் பல பாடல்களைப் பாடியுள்ளார். சென்ற பாட்டில், “நின் முடிமேல் உள்ள சந்திரன் பகலிலும் கதிரவனைப் போல ஒளிவிடுமோ?’ என்று கேட்டவர், அந்தத் திங்களைப்பற்றிய எண்ணத்தைத் தொடர்ந்து மேலும் சிலவற்றை எண்ணுகிறார். இறைவனுடைய திருமுடியில் சந்திரனோடு பாம்பும் இருக்கிறது. அந்தத் திருமுடி செஞ்சடை செறிந்தது. அந்தச் சிவப்பையும் சந்திரனையும் சேர்ந்து பார்த்தால் அந்தியிலே தோன்றும் செவ்வானமும் அதில் தோன்றும் திங்களும் போலக் காட்சி அளிக்கின்றன. சடையும் திங்களும் சேர்ந்த சேர்க்கை இப்படிப் பொருத்தமாக உவமை கூறும்படி இருக்கிறது. ஆனால் அங்கே பாம்பும் இருக்கிறது. சிவபெருமான் திருமார்பிலும் திருமுடியிலும் பாம்புகளையே அணிகலன்களாக அணிந்திருக்கிறான். செக்கர் வானத்தில் பாம்புக்கு என்ன வேலை? உவமையை விரித்துப் பார்க்க வழி உண்டா?

ஓ! பாம்புக்கு ஒரு தொடர்பு உண்டு. சந்திரனை விழுங்குவது ராகு கேதுக்களாகிய பாம்புகளே அல்லவா? எனவே பாம்பு மெல்ல மெல்ல இறைவன் சடாபாரத்திலே ஊர்ந்து வருவதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்ய முடியும் என்று தெரிகிறது.

பாம்பு சட்டென்று சந்திரனைப் பற்றிக்கொள்ளவில்லை. அது அங்கும் இங்கும் திரிந்து நாக்கை நீட்டுகிறது. சந்திரன் இருக்குமிடம் தெரியாமல் தேடுகிறதோ? சடைக்காட்டில் அது நுழைந்து நுழைந்து வரும்போது அப்படித்தான் தோன்றுகிறது.