பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408

சந்திரனைத் தேடிச் செல்லும் பாம்புக்கு அது தட்டுப்படாதா? இரவிலே சந்திரன் ஒளியை அது நன்றாகக் காணலாம். பகலிலே சூரியனுக்கு முன் ஒளியிழந்து தோன்றும். செவ்வானம் தோன்றும்போது எதிரே நிலாவின் ஒளி நன்றாகத் தோன்றாது. பகல் நேரத்திலும் அது பளிச்சென்று தெரியாது. இந்தப் பாம்பு காலைநேரத்தில் சந்திரனைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதுபோலத் தவிக்கிறதோ?

இப்படியெல்லாம் அம்மையாரின் மனம் கற்பனைக் குதிரையின்மேல் ஏறி வையாளி நடைபோடுகிறது.

இறைவன் திருமுடி அந்திச் செவ்வானமே போல் செந்நிறமாகத்தோன்றுகிறது. அவன் செஞ்சடையப்பன் அல்லவா? அந்தத் திருமுடியில் நிலா இருக்கிறது.

நிலாஇருந்த
செக்கர்அவ் வானமே ஒக்கும்
திருமுடிக்கே.

அந்தத் திருமுடிக்குள் பாம்பு புகுந்து புகுந்து வெளிப்படுகிறது. எதையோ தேடுவது போல அது திரிந்துகொண்டிருக்கிறது. அந்த அரவம் திருமுடிக்குள்ளே புகுந்து உலாவி உழிதருகிறது.

திருவடிக்கே புக்கு.... உலாவி உழிதரும்.

காட்டுக்குள் புகுந்து தேடுவது போலத் தேடுகின்றதே! எதைத் தேடுகின்றது? நிலாவோடு விளங்கும் வெண்மதியைத் தேடி அதைத் தனக்கு உணவாகக் கொள்ளும்பொருட்டு அது உலவுகிறதோ? இருட்டிலே சந்திரனைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. அதன் ஒளி எங்கும் பரவியிருக்கும். ஆனால் பகலில் அவ்வளவு தெளிவாகச் சந்திரன் தெரியாது காலையில் சந்திரனைத் தேடுவதுபோல அல்லவா இந்தப்பாம்பு உலாவித் திரிகிறது.