பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

409

விரிவான வானத்தில் பகல்நேரத்தில் எங்கேயோ மங்கித் தோன்றும் சந்திரனைத் தேடிப் பிடிக்க உலாவித் திரிவதுபோல இந்தப் பாம்பு திரிகிறதா? இப்படிக் கேட்கிறார் காரைக்கால் அம்மையார்.

நிலாஇலங்கு வெண்மதியை
தேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா
கொல்லோ?—நிலாஇருந்த
செக்கர் அவ் வானமே
ஒக்கும் திருமுடிக்கே
புக்கு அரவம் காலையே போன்று.

[பாம்பானது நிலா இருந்த அந்தச் சிவப்பான அந்தி வானத்தை ஒத்து விளங்கும் சிவபெருமானுடைய அழகிய முடியிலே புகுந்து, நிலா விளங்குகின்ற வெண்ணிறமுள்ள சந்திரனைக் காலை நேரத்தில் தேடுவதைப் போன்று, அதைத் தேடிப் பற்றிக் கொள்வதைப் போல உலவித் திரியும் வண்ணமோ?

தேடி - தேடி கொள்வான்போல் — கொள்வதுபோல, கொள்வான்-கொள்ளுதல்; தொழிற்பெயர். உழிதருமா கொல்லோ—உழிதருமாறோ? உழிதருதல்-திரிதல். இந்தக் காட்சி என்ற எழுவாயை இசையெச்சத்தால் வருவித்து முடிக்கவேண்டும். செக்கர்—செந்நிறம்; செக்கரை உடைய அந்திவானம், திருமுடிக்கே — திருமுடியில்; உருபு மயக்கம். அரவம்: எழுவாய். காலையே போன்றும் உழிதருமா கொல்லோ?]

பாம்பு சடாமுடியின் மேலும் கீழும் புகுந்து வெளிப்பட்டுத் திரிவதற்கு ஒரு காரணம் கற்பிப்பவரைப் போல இந்தப் பாடலைப் பாடியுள்ளார் அம்மையார்.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 64-ஆம் பாடல்.