பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66. காலை முதல் இரவு வரை



இறைவனிடம் ஈடுபட்டவர்களுக்கு எதைப் பார்த்தாலும் அவனுடைய நினைவு எழும். வேப்பம் பழத்தைக் கண்டு சிவலிங்கத்தையும், தவளையின் ஒலியைக் கேட்டு ஹரஹர என்ற முழக்கத்தையும் நினைத்து உருகினான் வரகுண பாண்டியன். உவர் மண்ணால் வெளுத்த மேனியை உடைய வண்ணானைக் கண்டு முழுநீறு பூசிய முனிவனாக வணங்கினார் சேரமான் பெருமாள் நாயனார்.

காதல் மிகுந்தவர்கள் எப்போதும் தம் காதலரை எண்ணிக் கொண்டிருப்பார்கள். எதைப் பார்த்தாலும் அவருடைய நினைவே எழும். இப்படி உள்ள மனநிலையை, ‘நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்ற மெய்ப்பாடாகச் சொல்வர் புலவர். காதலும் பக்தியும் பல திறங்களில் பொதுவான அநுபவங்களை உடையன. அதனால்தான் பக்தர்கள் ஆண்டவனைக் காதலனாக வைத்துத் தம்மை காதலியாக்கிக் கொண்டு தெய்விகக் காதற் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

காரைக்காலம்மையார் இறைவனிடம் முறுகிய பக்தி பூண்டு எப்போதும் அவனுடைய திருவுருவத்தையும் அருட்குணங்களையும் எண்ணி இன்புறுபவர். கவிபாடும் புலமையுடையவராதலின் இறைவனைப் பற்றி எண்ணும் எண்ணங்களெல்லாம் கவிவடிவில் அமைகின்றன. இறைவனோடு நெருங்கிப் பேசும் உரிமை அவருக்கு உண்டு. ‘ஏன் சுவாமி, இப்படியெல்லாம் செய்கிறீர்?’ என்று உரிமையோடு கேட்பார். அவனுடைய அருளை எண்ணி எண்ணி உருகுவார்.