பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

411

இப்போது அம்மையார் காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஈடுபடுகிறார். எல்லையில்லாத காலத்தைத் துண்டு துண்டாக வெட்டி அளவு காட்டிப் பெயர் வைத்திருக்கிறார்கள். மன்வந்தரம், சதுர்யுகம், யுகம், வருஷம், மாதம், வாரம், நாள், நாழிகை, விநாடி என்றெல்லாம் காலத்தின் பெரிய சிறிய கூறுபாடுகளை நாம் அறிவோம். ஒவ்வொரு நாளும் நமக்குத் தெளிவாகத் தெரியும் காலப்பகுதி, விடிந்து, பகலாகி மாலையாகி இருள் வந்து நாள் முடிவு பெறுகிறது. ஒரு நாளில் தெளிவாகக் காலைநேரம் தெரிகிறது. கடும்பகலாகிய நடுப்பகலும் தெரிகிறது. பிறகு மாலை வருகிறது. தொடர்ந்து இரவு வருகிறது. இதனோடு அந்த நாள் முடிகிறது.

சோமவாரம் சிவபெருமானுக்கு உரியது. ஆகையால் திங்களன்று அவன் நினைவு எழ நியாயம் உண்டு. திருவாதிரை நட்சத்திரம் இறைவன் திருநடனம் புரிந்த நாள். அப்போதும் அவன் நினைவு உண்டாகலாம். சிவராத்திரி வந்தால் சொல்லவே வேண்டாம்; அந்தப் பெயரே சிவபெருமானை நினைப்பூட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எந்த விதமான சிறப்பும் இல்லாத சாமானிய நாளில் சிவபெருமானை நினைக்க வழி உண்டா? எல்லா நாட்களுக்கும் சிவபெருமானோடு தொடர்புடைய புராணக்கதைகள் உண்டா? அப்படி இல்லை. ஆனாலும் எந்த நாளானாலும் சிவபெருமானை எண்ணுவதற்கு வகை உண்டு; மனம் இருந்தால் வழி உண்டு.

காரைக்கால் அம்மையார் நமக்கு வழி சொல்லித் தருகிறார்.

இருள் போய் விடிந்துவிட்டது. சூரியோதயம் ஆகிவிட்டது. இந்த நாள் தொடங்கி விட்டது. கீழ்வானத்தில் இன்னும் சூரியன் முழுமையாக வெளி வரவில்லை. ஆனாலும் அவன் ஆழ்கடலிலிருந்து எட்டிப் பார்ப்பது போலப் பாதிவடிவுடன் தோன்றுகிறான். அப்போது கீழ்வானம் முழுவதும்