பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

செம்மை ஒளி. கீழ்த் திசையாகிய உழையென்னும் கன்னி இலேசான செம்பொடியை முகம் முழுதும் பூசிக்கொண்டு நடுவே பளிச்சென்று சிவப்புக் குங்குமத்தை இட்டுக் கொண்டிருக்கிறாளோ?

காலைச் சிவப்பிலே ஒளியும் ஊக்கமும் மலர்ச்சியும் நம்பிக்கையும் தோன்றுகின்றன. அந்த உதயச் சிவப்பிலே இறைவனைக் காண்கிறார் அம்மையார். இறைவன் செம்மேனி அம்மான் அல்லவா? அவன் திருமேனி காலையில் சூரியோதயத்தில் வானில் செந்நிறம் படர்ந்திருக்கும் காட்சியைப் போலத் தோன்றுகிறதாம்.

காலையே போன்று இலங்கும் மேனி.

விடிந்த பிறகு எழுந்து கீழ்வானத்தைப் பார்த்துக் கும்பிடலாம் போல் இருக்கிறது. அங்கே எம்பெருமானுடைய திருமேனியைக் காணும் கண்ணும் கருத்தும் இருந்தால் உடனே கும்பிடத்தானே தோன்றும்?

காலைநேரம் போய்ப் பகல் வருகிறது. கதிரவன் மெல்ல மெல்ல வானத்தில் ஏறுகிறான். அவன் மேலே ஏற ஏறச் செவ்வண்ண ஒளி போய் எங்கும் ஒரே வெள்ளொளி பரவுகிறது. கடும்பகலாகிய நண்பகல் வேளையில் எங்கே பார்த்தாலும் கதிரவனுடைய கதிர்கள் வெண்ணிறமாக ஒளி வீசுகின்றன.

அந்தக் கடும்பகலில் சிவபெருமானைக் காண்கிறார் அம்மையார். இறைவன் செம்மேனியனாக இருந்தும், திருமேனி முழுதும் திருற்றைப் பூசியிருக்கிறான். அதனால் பால்வண்ண மேனிப் பிரானாகக் காட்சி தருகிறான். ஒரே வெள்ளை. முழு நீறு பூசிய முதல்வன் இப்போது வெண்ணிற மேனிப் பிரானாகத் தோன்றுகிறான். காலையில் தோன்றிய செம்மேனி மேல் திருநீறு பூசி வெண்ணிறம் கப்பிக் கொண்டது போல இந்த நண்பகல் வெயில் எங்கும் வெண்ணிறத்தைப் பூசியிருக்கிறது. ஆகவே கடும் பகல் வெண்ணீற்றை நினைக்கச் செய்கிறது.