பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

413

கடும்பகலின் வேலையே போன்று இலங்கும் வெண்ணீறு

என்று பாடுகிறார் அம்மையார்.

இதோ அந்தி மாலை வந்துவிட்டது. இப்போது மேல் வானம் ஒரே குங்குமச் சிவப்பாகச் சிவந்திருக்கிறது. அந்திமாலைக்கு அடையாளம் செக்கர்வானம். அந்த நேரத்தில் இறைவனுடைய செஞ்சடை நினைவுக்கு வருகிறது அம்மையாருக்கு.

மாலைவில் தாங்குஉருவே போலும் சடைக்கற்றை

அந்திமாலை கடந்து, இருள் வந்துவிட்டது. எங்கும் இருள் படர்ந்து கவிகிறது. கருமை அடர்ந்த இருள் இரவிலே உலகத்தைப் போர்த்து மூடியிருக்கிறது. காலைச் செம்மையில் இறைவன் திருமேனியின் வண்ணத்தையும், நண்பகல் வெண்மையில் இறைவன் திருமேனியில் பூசிய வெண்ணீற்றின் வெண்மையையும், அந்திச் செவ்வானத்தில் இறைவன் சடைக்கற்றையையும் நினைத்த அம்மையார், இரவிருளைக் காணும்போது எதை நினைக்கிறார்.

இறைவனுடைய திருக்கழுத்தில் ஆலகால நஞ்சு இருக்கிறது. அது ஒரே கறுப்பு. இந்த இரவின் இருள் அந்தத் திருக்கழுத்தை நினைப்பூட்டுகிறது.

மற்றுஅவற்கு
வீங்குஇருளே போலும் மிடறு.

காலை, கடும்பகல், மாலை, இரவு என்ற நான்கு வேளைகளிலும் இறைவனை நினைக்கும் வழியைக் காரைக்காலம்மையார் நமக்குச் சொல்லிக் கொடுத்து விட்டார். காலையில் செவ்வண்ணமேனிச் சிவபெருமானே என்றும், நண்பகலில் வெண்மையையடைய நீறு பூசும் நின்மலனே என்றும், அந்திச் செல்வானச் சடையுடைய அப்பனே என்றும், இரவிசூளனைய நீலகண்டப் பெருமானே என்றும் நான்கு வேளையிலும் முறையே இறைவனைப் போற்றி வழிபடலாம்.