பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

417

அவை. அந்தக் கட்டைகளை அடுக்கி அடுக்கிப் பார்த்துக் குழந்தைகள் ஆனந்தத்தை அடைவார்கள்.

இறைவரிடம் பக்தி கொண்டவர்கள் அவருடைய நாமத்தையும் புகழையும் பல வகையில் எண்ணுவார்கள்; பேசுவார்கள். தம்முடைய மனநிலைக்கு ஏற்ப இறைவரைப் பற்றிய எண்ணங்களிலும் கற்பனைகளிலும் ஈடுபடுவார்கள். கட்டைகளைப் பலவேறு வகையில் அடுக்கி அழகு பார்த்து இன்புறும் குழந்தைகளைப் போல, அன்பர்கள் இறைவரைப் பலபடியாக அலங்கரித்துப் பார்த்து இன்புறுவார்கள்.

“உன்னைச்சிங் காரித்து உட் அழகைப் பாராமல்
என்னைச்சிங் காரித் திருந்தேன் பராபரமே!”

என்ற தாயுமானவர் பாட்டில் இந்தக் கருத்தைக் காண்கிறோம். அன்பர்கள் இறைவரை மலர், ஆடை, அணி முதலியவற்றால் புனைந்து தரிசிப்பார்கள். தமிழ்ப் புலமையுடைய பக்தர்களோ பெருமான் புகழைப் பல வடிவத்தில் கவியாகப் பாடுவார்கள். தம்முடைய அறிவையும் கற்பனையையும் பயன்படுத்திப் பல பல பாமாலைகளைச் சூட்டுவார்கள்.

காரைக்காலம்மையார் சிவபெருமானையும் அவர் அணிந்திருக்கும் பொருள்களையும் அவர் செய்தருளிய செயல்களையும் நினைவு கூர்ந்து பல பல வகையான கற்பனையில் ஈடுபடுவார். இறைவருடைய செயல்களைப் பற்றி வினவுவார். அவருடைய கோலத்தைப் பற்றிய வினாக்களை விடுப்பார். தம்முடைய புலமையையும் கற்பனையையும் இறைவரைப் பற்றிய செய்திகளில் இணைத்துப் பாடுவார். சிவபெருமானைப் பற்றிய எண்ணங்களிலே மூழ்கிக் காலத்தைப் போக்கும் இயல்புடையவராதலின் அவருடைய எண்ணங்கள் யாவும் அப்பெருமானைச் சார்ந்தே படர்கின்றன.

நா—27.