பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

419

தந்தையைக் குழந்தை சில கேள்விகளைக் கேட்கும்போது அயலாருக்கு அந்தக் கேள்வி பைத்தியக்காரத்தனமுடையதாகக் தோன்றும். ஆனால் தந்தைக்கோ தன் குழந்தை தன்னை அன்போடு கேட்கிறதே என்ற மகிழ்ச்சியே உண்டாகும். அம்மையாரும் குழந்தை போன்ற மன நிலையில் இருந்து தம்மை ஆண்டருளிய தந்தையைக் கேட்கிறார்.

மிடற்றில் விடம்உடையீர், உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடம்கொணட வாறோ? மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணம் கரிதாலோ?
பைத்தாடும் நும்மார்பில் பாம்பு.

[திருக்கழுத்தில் ஆலகால நஞ்சை உடைய எம்பெருமானே, உம்முடைய திருமார்பில் படம் எடுத்தாடும் பாம்பு, தன் கழுத்தில் கருமை பரவிய இருள் போல நிறம் கரியதாக இருக்கிறது; அது உம்முடைய திருக்கழுத்தை நக்கி அங்குள்ள விடத்தைத் தன் கழுத்திலும் கொண்ட வண்ணமோ இது?

விடம்—ஆல கால நஞ்சு. பாம்பு கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பதனால் இறைவர் திருக்கழுத்தை நக்கும் வாய்ப்பைப் பெற்றது. கொண்டவாறோ — கொண்ட விதமோ? ‘வண்ணம்’, ‘பாம்பு கொண்டவாறோ’ என்று முடிக்க வேண்டும். மைத்தாம்—கருமை பரவிய, மைத்து ஆம்—கரியதாகிய என்றும் பொருள் கொள்ளலாம். வண்ணம் இருள் போலும் கரிது. ஆல், ஓ: அசைகள். பைத்து — படம் எடுத்து. பாம்பு கரிது, கொண்டவாறோ என்று முடிக்க.]

அற்புதத் திருவந்தாதியில் 66-ஆம் பாடல் இது.