பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68. இறைவன் என்னும் மலை


மிகப் பெரிய சான்றோர்களை மலை என்று சொல்வார்கள். “மலை போல நீ இருக்கும்போது எனக்கு என்ன குறை?” என்று உலக வழக்கில் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். சிறந்த ஆசிரியர்களுக்கு மலையை உவமை கூறுவர்.

“அளக்கல் ஆகா அளவும் பெருமையும்
துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே”

என்பது மலையின் சிறப்பைச் சொல்லும் சூத்திரம். இந்த இலக்கணங்கள் யாவும் சான்றோர்களிடம் பொருந்தியிருக்கும்.

இறைவனிடம் மிகச் சிறப்பாக அந்த இயல்புகள் அமையும். அவன் அளக்கல் ஆகா அளவுடையவன். எந்த அளவைகளாலும் அளந்து வரையறை செய்ய முடியாதவன் அவன். ஆதலால் அவனை அப்பிரமேயன் என்று கூறுவர். துளக்கலாகா நிலை என்றது, சலனமற்ற இயல்பைக் கூறுவது. இறைவன் அசஞ்சலன். தோற்றம் சிறந்து நிற்பவன் இறைவன். வறப்பினும் வளந்தரும் வண்மையும் உடையவன் அவன்; அதாவது எங்கே கருணை வற்றிப் போனாலும் அவனுடைய கருணை வற்றாது. வற்றாத பெருங்கருணையை உடையவன் அவன். “நீ மறந்தாய் எனினும், அகிலமெலாம் அளித்திடும் நின் அருள் மறவாதென்றே, இன்னம்மிகக் களித்திங்கே இருக்கின்றேன்” என்று அந்த அருளைச் சிறப்பித்துப் பாடுவார் அருட்பிரகாச வள்ளலார்.

இத்தகைய இயல்புகளை உடைமையால் இறைவனை, ‘மலையே’ என்று போற்றுவது அன்பர்கள் வழக்கம். “வேடர்