பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

421

குலப்பிடிதோய் மலையே” என்று முருகப்பெருமானைச் சொல்வார் அருணகிரிநாதர். “மாலமுதப் பெருங்கடலே, மலையே நின்னைத் தந்தனை” என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. இப்படி எந்த அடையும் இன்றி, மலையே’ என்று அழைத்து விண்ணப்பித்துக் கொள்ளும் இடங்கள் அருளாளர் வாக்கில் பல பல.

காரைக்கால் அம்மையாரும் இறைவனை வேறு வகையில் மலை என்று சொல்கிறார். மலையின் தோற்றத்தையும் இறைவனின் திருக்கோலக் காட்சியையும் ஒப்பிட்டுச் சொல்லுகிறார். அவன் மலையைப் போன்ற தோற்றம் அளிக்கிறானாம். அவனிடத்தில் உள்ள பொருள்கள் மலையை நினைப்பூட்டுபவையாக இருக்கின்றனவாம். ஆகையால், "இறைவன் திருவடிவத்தில் ஒரு மலையைப் போலக் காட்சி அளிக்கிறான்” என்று சொல்ல வருகிறார்.

மலையில் மரங்களும் விலங்குகளும் பாம்பு முதலிய ஊர்வனவும் இருக்கும். உயர்ந்து ஓங்கிய மலைமுகட்டில் இரவில் சந்திரன் தோன்றுவான். ஒரு புறம் பாம்பு ஒடும்; ஒரு புறம் மென்மையான மான் தாவும்; பின்னும் ஒரு புறம் வன்மையான புலி பாயும்; ஒரு பக்கத்தில் அருவி வீழும். இத்தகையவற்றை இறைவனிடமும் காணலாம்.

அவன் திருவாபரணமாகப் பாம்பை அணிந்திருக்கிறான். தலையில் சந்திரனைச் சூடியுள்ளான். தாருகாவனத்து முனிவர் அவனைப் பொருவதற்கு அனுப்பிய மானை ஏந்தியிருக்கிறான். அவர்கள் அனுப்பிய புலியை உரித்து அதன் தோலை உடுத்திருக்கிறான். அதை மட்டும் பார்த்தால் புலியோ என்று ஐயுறும்படி இருக்கும். அவனுடைய திருமுடியிலிருந்து கங்கை அருவி போல வீழ்கிறது. பகீரதனுக்காக அவ்வாறு விழச் செய்தான். இவை எல்லாம் இருப்பதனால் அவன் மலையைப் போலத் திகழ்கிறானாம்.