பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422


பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
தாம்பயின்று தாழருவி தூங்குதலால்.

இவ்வாறு மலைக்கும் இறைவனுக்கும் உள்ள ஒப்புமையை சொன்னார்.

இறைவன் திருமேனி செம்பொன் வண்ணம் உடையது; “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்” என்பது பொன்வண்ணத்தந்தாதி. அந்தப் பொன்னிறம் ஒளி ஓங்கிச் சுடர்விடுகிறது. அவன் நெற்றியிலே கண்ணை உடையவன். அது அவனுக்கென்றே அமைந்த சிறப்பான அடையாளம்.

ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான்.

அவனுடைய அழகுடைய தெய்வத் திருவடிவம் மேலே சொன்ன பொருள்களை உடைமையால், அவனை மலை என்றே சொல்லிவிடலாம். யாவரும் விரும்பும் மலை அவன். பாம்பும். புவியும் இருந்தாலும் அவனை அன்பர்கள் விரும்புவார்கள்.

கோலத்
திருவடிவில் மேய சிலம்பு.

மற்ற மலைகளில் பாம்பும் புலியும் இருந்தால் அந்த இடங்களுக்கு யாரும் விரும்பிச் செல்லமாட்டார்கள். இறைவனோ தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் கொடுமை இல்லாதவையாகச் செய்து விடுபவன். ஆகையால் அவனை அணுகுவதற்கு அன்பர்கள் விரும்புவார்களேயன்றி, அஞ்சி நடுங்க மாட்டார்கள்.

இவற்றையெல்லாம் சேர்த்து அம்மையார் பாடுகிறார்.

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
தாம்பயின்று தாழ்அருவி தூங்குதலால்—ஆம்பொன்
உருவடிவில் ஒங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடிவின் மேய சிலம்பு.