பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

423

[அணிகளாகிய பாம்பும், சந்திரனும், மென்மையான மானும், பாய்கின்ற புலியும் தாம் அவனிடத்தில் பல காலம் இருந்து பயின்று, கீழே விழுகிற கங்கையாகிய அருவி ஒழுகுவதால், பொன்னான நிறத்தையுடைய திருவுருவத்தில் சிறந்து நிற்கின்ற ஒளியைச் சேர்ந்தவனும், நெற்றியிலே கண்ணை உடையவனுமாகிய சிவபெருமான் தன்னுடைய அழகிய தெய்வத் திருவடிவினால், அன்பர்கள் விரும்பிய மலையாக உள்ளான்.

பாம்பு, சிவபிரான் அணிகலனாக அணிந்தது. மதி அவன் திருமுடியில் சூடியது. பாய்புலி அவன் உரித்து ஆடையாக அணிந்தது; "புலித்தோலை அரைக்கு அசைத்து” என்பது தேவாரம். தாழ்அருவி—கீழே விழும் அருவி; கங்கை. தாள் அருவி என்பது ஒரு பாடம். தூங்குதலால்—கீழே தொங்குவது போல இடையறாது பாய்வதால். ஆம்பொன் உரு வடிவில்— ஆகிய பொன் நிறத்தைப் பெற்ற வடிவத்தில். வடிவில் ஒளி சேர் கண்ணுதலான். கண்ணுதலான்—நெற்றியில் கண்ணையுடையவன். கோலம் — அழகு. திரு — தெய்வத்தன்மை. மேய—மேவிய; அன்பர்கள் விரும்பிய. சிலம்பு—மலை]

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 67-ஆம் பாடல்.