பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69. திருமுடியின் கோலம்


அகப் பொருளில் களவு, கற்பு என்ற இருவகை நிலை உண்டு. திருமணம் செய்வதற்கு முன் காதலனும் காதலியும் உள்ளம் ஒன்றுபட்டு வாழும் வாழ்க்கையைக் களவென்றும், திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியராக வாழும் நிலையைக் கற்பென்றும் சொல்வர். கற்பு வாழ்க்கையில் ஊடலும் கூடலும் நிகழும்.

உலகத்திலுள்ள மக்கள் இன்னவாறு வாழவேண்டுமென்று இறைவன் தன் செயலால் காட்டுகிறான். மனைவி மக்களோடு அறம் செய்து வாழும் வாழ்வு சிறந்தது என்பதை அவனும் உமாதேவியாரோடும் கணபதியோடும் முருகனோடும் வாழ்ந்து காட்டுகிறான். கணவன் மனைவியிடையே ஊடல் நிகழ்வது இயல்பு. அந்த ஊடல் இறைவனுடைய திருவிளையாடலிலும் உண்டு. அம்பிகை ஊடுவதும் அதைப் போக்க இறைவன் முயலுவதுமாக உற்சவம் நடப்பதுண்டு. திருவண்ணாமலையில் திருவூடல் தெரு என்றே ஒரு தெரு இருக்கிறது.

உமாதேவி ஊடுவதாகவும் அந்த ஊடலை நீக்க இறைவன் பல வகையில் முயல்வதாகவும் கற்பனை செய்து புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அவ்வாறு இறைவன் முயலும்போது இறைவியை வணங்குவதாகச் சொல்வதும் மரபு. அருள்மயமான பிராட்டி உளம் குளிர்ந்தால்தான் உலகுக்கு இன்பம் விளையும். ஆதலின் அந்தப் பிராட்டியின் ஊடலைத தணிக்க இறைவன் பணிவது தவறு ஆகாது.

இப்படி, அம்பிகையின் ஊடலை நீக்க இறைவன் பணியும் செயலை நினைத்துக் காரைக்காலம்மையார் ஒரு பாடல் பாடுகிறார்.