பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

425

இறைவி தன் திருவடிகளில் சிலம்பை அணிந்திருக்கிறாள். “சிலம்பணி கொண்ட செஞ்சீறடி பங்கன்” என்று திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் பாடுகிறார். அம்பிகை ஊடல் கொண்டபோது அந்தச் சிலம்பு கல்கல் என்று ஒலிக்கக் கடுகநடை நடந்து இறைவனிடத்தினின்றும் அகன்று செல்கிறாள்.

அப்போது அந்தப் பிராட்டியின் ஊடலைப் போக்க இறைவன் எண்ணுகிறான்.

சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டி

வேறு யாரையாவது அனுப்பிச் சமாதானமான வார்த்தைகளைச் சொல்லி அந்த ஊடலைத் தவிர்க்க அவன் விரும்பவில்லை. அப்படித் தூது அனுப்பி ஊடலைப் போக்குவதும் உண்டு. பரவையார் கொண்ட ஊடலைத் தவிர்க்கச் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக இறைவன் தூது சென்ற வரலாறு பெரியபுராணத்தில் வருகிறது.

இங்கே அப்படிச் செய்யாமல் தானே முயன்று பிராட்டியின் ஊடலைத் தவிர்க்க எண்ணுகிறான் இறைவன். அவளுடைய சிலம்பை அணிந்த அடியில் வீழ்ந்து வணங்குகிறான். அம்பிகை திருவடிகளில் செம்பஞ்சுக் குழம்பைப் பூசியிருக்கிறாள். இறைவன் வணங்கும்போது அந்தக் குழம்பு அவன் திருமுடியில் படுகிறது.

இறைவனுடைய சடைமுடி இயல்பாகவே சிவப்பாக உள்ளது. இப்போது அம்பிகையின் திருவடியில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பின்னும் சிவப்பாகத் தோன்றுகிறது. அது பார்ப்பதற்கு அழகாக, நலம் பெற்று விளங்குகிறது. அந்தச் சிவப்பு, அந்தரங்கத்தில் நிகழ்ந்த செயலை விளம்பரப் படுத்திவிடுகிறது!

இவ்வாறு வணங்கியதனால் அவனுடைய சடைமுடி செக்கச்செவேலென்று நிறம் பெற்று விளங்குகிறது. அந்தத்