பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70. அவலம் உண்டோ?


சிவபெருமான் காலனை உதைத்த கால காலன். அவனை நம்பிப் பக்தி செய்வாருக்கு யமபயம் இல்லை. “நமனார்க்கு இங் கேதுகவை நாம்இருக்கும் இடத்தே” என்று கூறும் மிடுக்கு அவர்களுக்கு உண்டு. “நாமார்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்” என்று பாடுவார் அப்பர் சுவாமிகள்.

இத்தகைய உறுதிப்பாட்டைக் காரைக்காலம்மையாரும் பெற்றிருந்தார். அதை ஒரு பாட்டில் சொல்கிறார்.

சிவபெருமான் தன்னுடைய திருமுடியின்மேல் வளைந்த பிறையை அணிந்திருக்கிறான். அந்தச் சந்திரன் வளர்வதோ தளர்வதோ இன்றி, மாயாமல் என்றும் இறைவன் திருமுடி மேல் இருக்கிறான். வானத்தில் தோன்றும் மதிக்குத் தேய்வதும் வளர்வதும் உண்டு. இறைவனைச் சேர்ந்த திங்களுக்கோ அவை இல்லை. இறைவனைச் சேர்ந்தவர்கள் தளராமலும் மாயாமலும் இருப்பார்கள் என்பதை அந்தத் திங்களே காட்டுகிறது.

இறைவன் மூன்று கண்ணை உடையவன். இந்த அடையாளம் அவன் ஒருவனுக்குத்தான் உண்டு.

முடிமேல் கொடுமதியான், முக்கணான்.

அவனுடைய அடி நல்ல அடி; நன்மையைத் தரும் அடி. நன்மையாவது பிறப்பாலும் இறப்பாலும் துன்பம் அடையாத நலம்.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”