பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

429


என்ற குறளின் உரையில், ‘பிறவிப் பிணிக்கு மருந்தாதலின் நற்றாள் என்றார்’ என்று விளக்கியுள்ளார் பரிமேழலகர்.பிறவிப் பிணியும் இறப்பும் இரட்டையாக வரும். பிறவிப் பிணி உண்டானால் இறப்பும் உண்டு. பிறவி இல்லையானால் இறத்தலும் இல்லை. ஆகவே பிறப்பிறப்பை நீக்கும் திருவடியை இங்கே அம்மையார், ‘நல்ல அடி’ என்கிறார்.

முக்கணான் நல்ல அடி.

அந்த அடியை வணங்கி எம்முடைய தலைமேற் கொண்டோம். ஆதலால் இனி எமக்கு வாதனை இல்லை. எனவே, கூற்றுவனை நாம் மதிக்க மாட்டோம் என்கிறார்.

நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றை.

சிவபக்தர்கள் இறந்துவிட்டால் கால தூதுவர்கள் வந்து அவர்களைக் கொண்டு செல்ல மாட்டார்கள்; சிவகணங்கள் அழைத்துச் சென்று சிவலோகத்திற் சேர்ப்பார்கள். மற்றவர்கள் மரணம் அடைவதற்கும் சிவபக்தர்கள் உயிர் பிரிவதற்கும் இதுதான் வேறுபாடு. மற்றவர்கள் உயிர் விட்டால் வேறு ஓர் உடம்பில் புகுவார்கள். ஒரு சிறையிலுள்ள குற்றவாளி வேறு ஓர் சிறைக்கு மாற்றப்படுவது போன்றது இது. பக்தர்கள் உயிர் விட்டால், சிறைத்தண்டனை நீங்கினவன் விடுதலை பெற்று அடைவதைப் போல, சிவலோகத்தை அடைவார்கள். அவர்களிடத்தில் காலனுக்கும் வேலை இல்லை; பிரமனுக்கும் வேலை இல்லை.

"சந்ததமும் வேதமொழி யாதொன்று
பற்றினது தான்வந்து முற்றும் எனலால்
சகமீ திருந்தாலும் மரணம்உண்
டென்பதைச் சதா நிஷ்டர் நினைவதில்லை"

என்பது தாயுமானவர் பாடல்.