பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

435

போது, நீ ஆடும் கனலும் உன் திருமேனியும் சடையும் நடனமும் தெளிவாகத் தெரியும் அந்தக் காட்சியை நான் காண விரும்புகிறேன். எந்த இடத்தில் நீ அப்படி நடனம் ஆடுகிறாய்? அந்த இடத்தைக் காட்டுவாயா?” என்கிறார்.

பொங்குஇரவில்
போந்துஎரி ஆடும் இடம்.

"இருள் பொங்கித் ததும்பி நின்றாலும் உன் அருள் பொங்கும் நடனத்தைக் காண அதுவே ஏற்ற நிலைக்களமாக இருக்கிறது. இருள் செறிந்த இரவில் மின்னல் கீற்றுத் தோன்றினால் பளிச்சென்று காட்சி தருவது போல, அந்த நடனக் காட்சி விளக்கமாகத் தெரியும். ஆதலால் அந்த நடனம் நிகழும் இடத்தைக் காட்டுவாயா?”

பொங்குஇரவில்
போந்து எரிபாய்ந் தாடும் இடம்
...எமக்கு ஒருகால் காட்டுதியோ?

உலகம் எங்கும் அவித்தை என்னும் அஞ்ஞானம் கப்பி மூடியிருக்கிறது. ‘இருள் தருமா ஞாலம்’ என்று இதனைக் கூறுவார்கள். எந்தச் சுடரும் தோன்றாவிட்டால் உலகம் இருளில் மூழ்கிக் கிடக்கும். அதற்கு அதுதான் இயல்பு. புறவிருள் மாத்திரம் அன்று. உலக இன்பத்தில் ஆழ்ந்து உண்மையென்னும் ஒளியைக் காணாமல் தடுமாறுகிறவர்கள், இருட்டில் வழி தெரியாமல் தடுமாறும் குருட்டுப் பசுக்களைப் போல இருப்பார்கள். உலகத்தைப் பார்க்கும்போது எங்கும் இருள், எல்லாம் இருளாக இருக்கும். இருள் நிரம்பிய இடத்தில் பொருள்களின் உண்மை வடிவம் தெரியாது. அவித்தையிருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு மெய்ப்பொருள் இன்னதென்று தெரிவதில்லை. ஏதேனும் ஒளி கிடைத்தால் அதனால் ஒருவாறு உண்மை புலனாகும். அந்த ஒளியினால் பொருள்களின் உண்மை இயல்பு தெரியும்.