பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

இறைவன் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன். இருளில் மூழ்கிக் கிடப்பவர்கள் அவன் ஆடும் எரியின் ஒளியிலே உண்மையை உணரத் தலைப்படுவார்கள். பிறகு அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்று ஆராயப் புகுந்தால் இறைவன் ஆடும் இடம் தெரியும். நெருப்பினிடையே அவன் ஆடும் நடனக் கோலத்தைக் காணலாம். அந்த இடம் தெரியாமல் இருட்பரப்பில் துழாவிக் கொண்டிருந்தால் நாம் கண் படைத்திருந்தாலும் பயன் இல்லை. இருட்டறையில் கண்ணுடையவனும் குருடனும் ஒரே நிலையில்தான் கையால் துழாவிக் கொண்டிருப்பார்கள். ஒளி வந்தால் கண் உடையவன் தன்முன் உள்ள பொருள்களைக் காணுவான்; கண் படைத்த பயன் பெறுவான். கண் இருந்தும் இருள் பரவிய இடத்தையே நம் இடமாக எண்ணி அதில் உழன்றால் நம் வாழ்நாள் வீணாகிவிடும். இறைவன் அளித்த கண்ணினால் பெறும் பயனைப் பெற மாட்டோம். ஆகவே ஒளி பரவும் இடத்தை நோக்கிச் சென்று காணவேண்டும். உடம்பினால் செய்யும் பயணம் அன்று அது. மனத்தினால் செய்யும் யாத்திரை அது. “ஒளி எங்கே? அதைத் தரும் நெருப்பு எங்கே? அந்த நெருப்பில் ஆடும் இறைவன் எங்கே?” என்ற ஏக்கம் முறுக முறுக நம்மை ஆண்டவன் அந்த இடத்துக்கு அழைத்துச் செல்வான்.

ஆகையால், "அப்பனே, நீ எரியில் பாய்ந்து ஆடும் இடம் எது? அதனைக் காட்டு. நான் அங்கே சென்று அந்த எரியைக் காண்பேன். அந்த எரியின் ஒளியால் பொருள்களின் உண்மை உருவைக் காண்பேன். அதை காட்டுவாயா?" என்று கேட்கிறார் அம்மையார்.

காட்டுதியோ எந்தாய்?
ஏந்து எரிபாய்ந்து ஆடும் இடம்.

இருட்டில் இருப்பவன் கண்ணை மூடிக்கொண்டு துழாவுகிறான். அவன் கண்ணைத் திறந்தாலும் அந்த இருளே தெரியும். இருட்டில் உழலும் குருடனுக்குக் கண்ணே கிடைத்