பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

437

தாலும், அவன் அப்பொழுதும் குருடனாகவே இருப்பான். ஒளி இருந்தாலன்றி கண் எதையும் காண இயலாது. நாம் கண் படைத்திருக்கிறோம். ஆனால் பொருளைக் காணுவதற்கு ஒளி கிடைக்கவில்லை. அந்த ஒளி கிடைக்கும் இடத்தை எனக்குக் காட்ட வேண்டும் என்பவரைப் போல இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார் காரைக்கால் அம்மையார்.

எமக்கு இதுவே பேராசை, என்றும் தவிராது;
எமக்கு ஒருநாள் காட்டுதியோ எந்தாய்? —அமைக்கவே
போந்துஎரி பாய்ந்தன்ன புரிசடையால் பொங்கு இரவில்
ஏந்து எரிபாய்ந்து ஆடும் இடம்.

[எம் தந்தையே, மற்ற ஒளிகளை அடக்கும் பொருட்டு நெருப்பானது வந்து பரந்தது போல்த் தோன்றும் புரிசடையுடைய சடாபாரத்தை உடையவனே, எமக்கு இது ஒரு பேராசை; அது எப்போதும் நீங்காமல் இருக்கிறது. இருள் விம்மித் ததும்பும் இரவிலே கொழுந்துகளைத் தாங்கும் நெருப்பிலே திருநடனம் ஆடும் இடத்தை எமக்கு ஒருநாள் காட்டுவாயோ?]

எமக்கு என்ற பன்மை இறைவனோடு உறவு கொண்டு நெருங்கிய நெருக்கத்தால் வந்த பெருமிதத்தைக் காட்டுகிறது. இதுவோ: ஓ-அசைநிலை. இது பேராசை, இது என்றும் தவிராது என்று, இது என்னும் எழுவாயைப் பின்னும் கூட்டுக; முதல் நிலைத்தீவகம். அமைக்க-மற்ற ஒளியை அடக்க. பாய்ந்தாலன்ன என்பது பாய்ந்தன்ன என்று விகாரமாயிற்று. புரிசடையாய்-தனித்தனியே பிரிந்து விளங்கும் சடையை உடையவனே. பொங்கு - இருள் பொங்கும், ஏந்துஎரி-கொழுந்துகளை ஏந்தும் எரி, நீ கையில் ஏந்துகின்ற நெருப்பு எனலும் ஆம். நெருப்பைக் கையிலே ஏந்திய நீ அதைக் காலின் கீழும் கிடத்தி அதன் வெம்மை அடராமல் குளிர்ந்திருக்க, அதன் மேல் ஆடுகின்றாய் என்ற நயமும் தொனித்தது.