பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

ஆம் இறை—திருக்கழுத்து றொரு நிறமாகிய கறுப்பாக உள்ள இறைவன். ஆள் ஆனோம்-அவனால் வலிய ஆளப்பட்டு அடிமைகளாகிய யாம், அல்லல் அறிய—என் துன்பங்களைத் (தானே குறிப்பினால்) தெரிந்துகொள்ள வேண்டியவனாக இருக்க, அவ்வாறு செய்யாமையால் யாம் எம்முடைய துன்பத்தை அவன் அறியும்படி, முறை இட்டால்—எடுத்து விண்ணப்பித்துக் கொண்டாலும், கேளாதது—அதைக் கேளாமல் இருப்பது, என்கொலோ?—என்ன காரணமோ?

"வலியத் தானே வந்து ஆட்கொண்டவன், யாம் வலியச் சென்று முறையிட்டும் கேட்கவில்லையே!” என்கிறார்.

[கேளாமை ஆட்கொண்ட இறை, நீளாகம் செம்மை யானாகித் திருமிடறு மற்றொன்றாம் இறை என்று கூட்டிப் பொருள் செய்யவேண்டும். கேளாமை—கேளாமல்; பொய்யாமை பொய்யாமை ஆற்றின் என்பதுபோல, மல் ஈற்று. வினையெச்சம் திரிந்து மையீறு பெற்றது. ஶ்ரீகண்டம்’ என்று இறைவன் திருக்கழுத்தைச்சொல்வதுண்டு; ஆகவே திருமிடறு என்றார், மற்ற ஒன்று: செம்மையல்லாமல் மாறுபட்ட ஒன்று; கறுப்பு.

அறிய-அறியாதவன்போல் இருக்கும் இறைவன் அறிந்து கொள்ளும்படி, தம் குறையைத் தீர்க்கவேண்டும் என்று தலைவர்களிடம் விண்ணப்பித்தலை முறையிடுதல் என்று கூறுவது மரபு. முறையிட்டாலும் என்ற உம்மை தொக்கது. கேளாதது—கேளாத செயல். என் கொலோ: கொல், ஓ இரண்டும் அசை; என் என்பதே வினாப் பொருளைத் தருதலால் அவ்விரண்டும் அசைகளாயின.

தன்மைப் பன்மையால் சொன்னது, பிற அடியாரையும் உளப்படுத்தி.

காரைக்காலம்மையார் அடிக்கடி நீலகண்டத்தை குறிப்பது வழக்கம்.]

அம்மையார் அருளிச் செய்த அற்புதத் திருவந்தாதியில் 4ஆவது பாடல் இது.