பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

கன்னியாக இருப்பவள். பெண்களுக்குரிய அணிகலனாகிய மடம் என்பதை, ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை’ என்பார்கள். அதாவது, பிறர் அறிவுறுத்துவதைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டு, தன் கருத்தை எளிதில் வெளிவிடாத அடக்கம். அம்பிகை இந்த மடமென்னும் குணத்தையும், சித்திரத்தில் வரைந்த பாவையைப் போல வாடாத அழகையும் பெற்றிருக்கிறாள். அதனால், 'மடப்பாவை’ என்று சொல்கிறார். மடம் என்பது இளமையையும் குறிக்கும்.

வானத்தில் எழும் மதியை வலப்பாகத் திருமுடியில் வைத்த மதியோடு இணங்க இடப்பாகத்திலும் வைத்தால் மாதிருக்கும் பாதியனாகிய அந்த வடிவத்தில் இரண்டு மதிகள் தோன்றும். அப்போது எது மலைமகளாகிய பார்வதியின் பாகம் என்று கண்டுகொள்ள முடியாது என்கிறார்,

இடப்பால வானத்து
எழும்மதியை நீஓர்
மடப் பாவை தன்அருகே வைத்தால்
—இடப்பாகம்
கொண்டாள் மலைப்பாவை.
கூறுஒன்றும் கண்டிலம்.

அம்மையும் அப்பனும் இணைந்திருக்கும் கோலத்தில் அவர்களை இனம் கண்டுகொள்ளும் அடையாளம் இப்போது இரண்டிடத்திலும் இருந்தால் மலைப்பாவை இருக்கும் கூறு இதுதான் என்று தெரிந்துகொள்ள முடியாதே; இருவரையும் ஒருங்கே கும்பிடலாம். ஆனால் தனித்தனியே அம்மைக்கும் அப்பனுக்கும் கும்பிடு போட வேண்டுமானால் அடையாளம் தெரியாமல் திகைக்க வேண்டியிருக்குமே.

"இந்த விஷயம் உனக்குத் தெரியுமா? மற்றவர்கள் எவ்வாறு வேற்றுமை காண்பார்கள் என்பதை நீ அறிந்தாயா?" மூன்று கண்ணை உடைய எம்பெருமானே, நாங்கள் இரண்டு