பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

441

கண்களால் பார்க்கிறோம். இரண்டு கண்களும் ஒன்றையே நோக்குபவை. எங்களுக்கும் மூன்று கண் இருந்தால் நடுநிலையில் நின்று பார்க்க முடியும்.அப்படி எங்களுக்கு இல்லையே! ஒன்றைப் பார்த்தால் மற்றொன்றை அதே சமயத்தில் பார்க்க முடியாதபடி எங்கள் பார்வை இருக்கிறது. இதை நீ எண்ணிப் பார்த்தாயா? இல்லையானால் இப்போதாவது எண்ணிப்பார்” என்று சொல்கிறார் அம்மையார்.

இடப்பால வானத்து எழுமதியை நீஓர்
மடப்பாவை தன் அருகே வைத்தால்——இடப்பாகம்
கொண்டாள் மலைப்பாவை கூறுஒன்றும் கண்டிலம்;காண்
கண்டாயே, முக்கண்ணாய், கண்.

இதன் பொருள்: மூன்று கண்ணையுடைய எம்பெருமானே இடப்பகுதிகளைத் தன்னிடத்தே கொண்ட வானத்தில் தோன்றும் பிறையை நீ ஒப்பற்ற இளமையையுடைய சித்திரப்பாவை போன்ற உமாதேவியின் வாம பாகத்தில் வைத்துக்கொண்டால், அப்போது உன் இடப்பாகத்தைத் தனக்கு உரியதாக ஆக்கிக்கொண்ட மலைமடந்தையாகிய பார்வதிதேவியின் கூற்றைச் சிறிதும் யாம் கண்டிலோம். இதை நீ அறிந்தாயோ? இல்லையெனின் இப்போதாவது எண்ணிப் பார்.

இடப்பால—இடங்களின் பகுதிகளைத் தன்னிடத்தே கொண்ட; இது வானத்துக்கு அடை. மதியென்பது பெரும்பாலும் முழுத் திங்களைக் குறித்தாலும் இங்கே பிறையைச் சுட்டியது. ஓர்—ஒப்பற்ற. மலைப்பாவை—பார்வதி. அருகே என்றது, பக்கத்தில் என்ற பொருளுடையது; இங்கே திருமுடியைக் குறித்தது. கூறு——பகுதி. ஒன்றும்—சிறிதும். காண்; அசை. கண்டாயே—ஏகாரம், வினா. முக்கண்ணாய் என்றது இருகண் இருந்தும் நடுநிலையில் நின்று பார்க்கும் பார்வை இல்லாதவர்கள் யாம் என்பதைக் குறிப்பித்தது. கண்— நினைப்பாயாக.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 71-ஆவது பாடல்.