பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73. என் கருத்து


இறைவனை இறைஞ்சி அவனுக்கு ஆட்பட்டுத் தொண்டு செய்யும் இன்பத்தைவிடச் சிறந்த இன்பம் வேறு இல்லை. உடம்போடு பிறந்த நமக்கு உடம்பின் உறுப்புக்கள் எல்லாம் செயல்பட்டால்தான் உடல் நலம் செவ்வையாக இருக்கும்.சில உறுப்புக்களுக்கு மட்டும் வேலை கொடுத்தால் மற்ற உறுப்புக்கள் செயல் செய்யாமையால் வலிமையை இழந்து விடும். ஆகவே, எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பவர்களுக்கு உடல்நலம் சரியானபடி அமையும்.

உழைப்பாளி ஒருவன் பிறருக்காக வேலை செய்து ஊதியம் பெறுகிறான். அவன் உழைப்பது பிறருக்காக; ஆனால் அந்த உழைப்புக்கு உரிய பயனாகக் கூலியைப் பெறுகிறான். உழைப்புக்குத் தக்க கூலி கிடைக்காவிட்டால் வருந்துகிறான். பிறருடைய தோட்டத்தில் வேலை செய்கிறவனுக்கு அந்தத் தோட்டம் வளம் பெறுவதில் உள்ள கருத்தைவிடக் கூலி பெறுவதில்தான் கவனம் மிகுதியாக இருக்கும். நிர்ப்பந்தத்தினால் கூலி குறைவாகக் கிடைக்கும் இடத்தில் வேலை செய்தாலும், கூலியே இன்றிப் பணி புரிந்தாலும் அவனுக்கு உண்டாகும் மனக்குறை அதிகமாக இருக்கும்.

தனக்காகவே ஒருவன் உழைத்தால் அப்போது அவனுக்கு இன்பம் மிகுதியாகும். தன் தோட்டத்தில் மண்ணைக் கிளறிச் செடியை நட்டுத் தண்ணிர் வீட்டு வேலை செய்கிறான். அவனுடைய உழைப்புக்குத் தனியே யாரும் கூலி கொடுப்பதில்லை. ஆனால் தோட்டம் நன்றாக வளரும்போது அவனுக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்கு எல்லையே இராது; அந்தத் தோட்டத்தில் விளையும் பொருள்களால் ஊதியமும் கிடைக்கிறது. தன் நலனுக்காகத் தானே உழைப்பதில் உண்டாகும் நன்மை இது.