பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

443

இறைவனுடைய திருத்தொண்டில் ஈடுபடுகிறவர்கள் இத்தகைய நிலையில் இருப்பவர்கள். தன் தோட்டத்தில் வேலை செய்கிறவனுக்கு உழைப்பால் சிரமம் உண்டானாலும் அதை அவன் பொருட்படுத்துவதில்லை. அந்த உழைப்பிலே அவன் இன்பம் காணுவான். எசமானியின் குழந்தைகளுக்கு நீராட்டி ஆடை உடுத்தி அலங்கரிக்கும் வேலைக்காரிக்கு, அந்த வேலைகள் கூலிக்காகச் செய்பவை. அவளுடைய நாட்டம் அந்தக் குழந்தைகளின் நலத்தில் இராது; கூலியிலேதான் இருக்கும். ஆனால் தன் குழந்தையைக் குளிப்பாட்டி ஆடையணிந்து அலங்காரம் செய்யும் தாய்க்கோ மிக்க இன்பம் உண்டாகிறது. இறைவனுடைய திருத்தொண்டைச் செய்கிறவர்கள் அத்தகைய இன்பத்தையே பெறுகிறார்கள். இப்போது இறைவனைக் கும்பிடுவதிலே இன்பம் இருக்கிறது. வீட்டின்பம் என்பது எப்படி இருக்குமோ? இப்போது இன்பம் இல்லாமல் இருந்தால்தானே வேறு ஒன்றை நாடவேண்டும்? கும்பிட்டுத் தொண்டாற்றும் இன்பம் நிறைவாகக் கிடைக்கிறது. அப்படி இருக்க வேறு ஒர் இன்பம் எதற்கு? அது வேண்டாம்’ என்று அன்பர்கள் நினைப்பார்களாம்.

"கூடும் அன்பினில் கும்பிட லே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினர்"

என்று அத்தகை அன்பர்களின் இயல்பைச் சேக்கிழார் சொல்கிறார்.

"முக்தியா? அப்படி ஒன்று தனியே இருக்கிறதா என்ன? நாங்கள் இப்போது அதைத்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்? பக்தி வழிபாடு என்னும் இதுதான் முக்தியின்பம். இதைப் போன்ற முக்தி வேறு ஏது?" என்று அவர்கள் கேட்பார்களாம். இப்படி அருணகிரிநாதர் சொல்கிறார்.

“ஆனபய பக்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பக்தஜன வாரக்காரனும்"

என்பது திருவகுப்பு.