பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444

இந்தத் திருத்தொண்டு வேண்டாம். இதில் என்ன சுகம் இருக்கிறது? அண்டங்களையெல்லாம் ஆட்சி புரியும் பெரிய, பதவியைத் தருகிறேன். எத்தனையோ வகையான இன்பங்களை யெல்லாம் பெறலாம் என்று சொன்னால்,'அந்த அண்டங்கள் எமக்கு எளிதிலே கிடைத்தாலும் வேண்டாம். இந்த இன்பத்தை விட அந்த ஆட்சியில் ஏது சுகம்?’ என்று சொல்வார்கள் உண்மை அன்பர்கள். காரைக்கால் அம்மையார். அப்படித்தான் சொல்கிறார்.

அண்டம் பெறினும் அதுவேண்டேன்.

இறைவனுடைய திருத்தொண்டில் ஈடுபட்டுக் கணந்தோறும் அந்த இன்பத்தில் ஆழ்வதைக் காட்டிலும் பெரிய இன்பம் அவர்களுக்கு வேறு இல்லை. இறைவனைக் கண்ணாரத் தரிசிப்பதிலே உண்டாகும் இன்பமும், அவனுடைய திருத்தொண்டிலே ஈடுபட்டு அங்கங்களையெல்லாம் அந்த தொண்டிலே செயற்படுத்தி வாழும் வாழ்வே இன்பமயமானது. அதை விட்டுவிட்டு வேறு எந்தச் செயல் செய்தாலும் அதில் இன்பம் இராது. ஆகவே அந்தக் கைப்பணியே இன்பம். அதைச் செய்யாமல் இருப்பது பெருந்துன்பம். "இதை விட்டுவிட்டுச் சும்மா இருக்க வேண்டாம். அண்டங்களை உரிமையாக்கிக்கொண்டு வாழலாம்" என்று போக்குக்காட்டினாலும், “அந்தப் பொறுப்பு வேண்டாம். இந்தக் கைப்பணியே எமக்கு இன்பம் தருவது" என்று நினைப்பது தொண்டர் இயல்பு. அதைச் சொல்கிறார் அம்மையார்.

கண்டுஎந்தை என்று இறைஞ்சும்
கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன்.

இறைவனே, "இந்த அண்டத்தை ஆளும் உரிமையைத் தருகிறேன்; பெற்றுக் கொண்டு சுகமாக இரு” என்று சொன்னாலும் அதை வேண்டாம் என்று சொல்லும் உறுதி அன்பர்களிடம் இருக்கிறது. கொடுப்பவன் பெரியவனா