பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

இறைவனை அடையாளம் கண்டு கொண்டவர் அம்மையார். அந்த அடையாளங்களைச் சொல்லி எம்பெருமானை விளிக்கிறார்.

அவன் தன் திருமுடியில் பிறையை அணிந்திருக்கிறான். பிறைக்கு மறு இல்லை. இறைவன் திருமுடியில் இருப்பதால் மறு இல்லாத அந்தச் சந்திரன் வளர்வதுமில்லை; தேய்வதும் இய்லை. இறைவனைச் சார்ந்தவர்கள் எந்த மறுவும் இன்றி, கிளர்ச்சி, தளர்ச்சிகள் இல்லாமல் என்றும் சலனமில்லாத நிலையில் இருப்பார்கள் என்பதை அந்தச் சந்திரன் புலப்படுத்துகிறான். இறைவன் குழந்தையைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வது போலச் சந்திரனைத் திருமுடியின்மேல் வைத்திருக்கிறான். அதன் அருகே பாம்பை அணிந்திருக்கிறான். பாம்புக்கு அஞ்சும் திங்கள் இப்போது அதன் அருகே ஒளிவிட்டு விளங்குகிறது. நீதிமுறை வழுவாமல் கோல் செலுத்தும் மன்னன் நாட்டில் புலியும் மானும் ஒரு துறையில் நீர் அருந்தும் என்று சொல்வார்கள். புலிக்கு மானை அடிக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றி அஹிம்லையியல்போடு இருக்கும். மானும் அச்சம் நீங்கி நீரைப் பருகும். அவ்வண்ணமே இறைவன் திருமுடியில் பாம்பும் மதியும் கூடிக் குலாவுகின்றன. அந்தத் திங்களைப் பார்க்கும்போது, இறைவனுடைய தொடர்பினால் எத்தகைய அற்புதங்கள் நிகழும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். விண்ணிலே உலவும் திங்கள் இப்போது இறைவன் திருமுடியில் அமர்ந்ததனால் இந்த நிலை கிடைத்திருக்கிறது.

துண்டம்சேர், விண் ஆளும் திங்களாய்!

இறைவன் உலகம் எல்லாவற்றுக்கும் கண்ணாகத் திகழ்கிறான். உடம்பில் கண் எவ்வாறு தலைமை பெற்று விளங்குகிறதோ அவ்வாறு இறைவன் இருக்கிறான். அவனே எல்லா உயிர்களுக்கும் கண்ணாக நின்று உலகத்தைக் காட்டுகிறான். அவன் காட்டுவிக்க நாம் காணுகிறோம். உலகம் ஏழும் உயிர்கள் வாழும் இடம். அவ்வுயிர்களுக்கு அவன் கண்.