பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

447

பெரிய உடம்பில் பல உறுப்புக்கள் இருந்தாலும், கண்இல்லா விட்டால் சரிவர இயங்க இயலாது. இறைவன் கண்ணாக இருந்து உலகை இயக்குகிறான். ஏழுலகங்களுக்கும் மேலாக நின்று, கண்ணாக இருந்து இயக்குகிறான். அந்தக் கண்ணாளனைப் பார்த்து, 'ஈது என் கருத்து’ என்று விண்ணப்பித்துக் கொள்கிறார் அம்மையார்.

கண்டுஎந்தை என்று இறைஞ்சிக்
கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும்
அதுவேண்டேன், துண்டம் சேர்
விண் ஆளும் திங்களாய்,
மிக்குஉலகம் ஏழினுக்கும்
கண்ணாளா, ஈதுஎன் கருத்து.

[துண்டமாகச் சேர்ந்ததும், வானிலே ஆட்சி புரிந்ததுமாகிய பிறையைத் திருமுடியில் புனைந்துள்ள பெருமானே, ஏழு உலகங்களுக்கும் மேலாக நிற்கும் கண்ணாக உள்ளவனே, உன்னைத் தரிசித்து, எம் தந்தையே என்று உன்னை வணங்கி, உன்னுடைய திருத்தொண்டை அடியேன் செய்யாமல் இருப்பேனாயின், அண்டத்தைப் பெற்றாலும் அந்தப் பதவியை அடியேன் வேண்டேன். இதுவே அடியேனுடைய கருத்து.

எந்தை-எம்தந்தையே, கைலையை அணுகிய அம்மையார். “அப்பா!” என்று சொல்லிப் புகுந்தார் என்பது வரலாறு. கைப்பணி-கையால் செய்யும் தொண்டு; கை என்று கூறினும், உடம்பு முழுவதும் உள்ள உறுப்புக்களைக் கொள்ளவேண்டும்; உபலட்சணம். அண்டம் பெறினும்-அண்டங்களை உரிமையாகப் பெற்று ஆட்சி புரியும் பேறு பெற்றாலும். அது-அந்தப் பதவியை, துண்டம் சேர் திங்கள், விண்ணாளுந் திங்கள் என்று தனித் தனியே கூட்டுக. துண்டம் என்றது பிறையை. விண்ணாளும் திங்கள் என்றது, அதன் பழைய நிலையைச் சுட்டியது. மிக்கு-மேலாக நின்று. கண்ணாளா-கண்ணைப் போல உள்ளவனே. ஈது- அண்டத்தையும் வேண்டாமை.]

அற்புதத் திருவந்தாதியில் உள்ள 72-ஆம் பாடல் இது.