பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74. நினைத்ததைப் பெறும் வழி


நம்முடைய மனத்தில் எத்தனையோ ஆசைகள் எழுகின்றன. செல்வம் வேண்டும்; வளமான பொருள்கள் வேண்டும்; அவற்றை அனுபவிக்கும் இன்பம் வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் தோன்றுகின்றன. அந்த ஆசைகளுக்கு அளவுண்டா ?. 'ஆசைக்கு ஒர் அளவில்லை’ என்று தாயுமானவர் சொல்லி விளக்குகிறாரே ‘அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அந்த ஆசை அடங்குகிறதா? கடல் மீதிலும் நம் ஆணை செல்ல வேண்டும்’ என்ற ஆசை எழுகிறது. குபேரனைப் போலப் பொற்குவியலை ஒருவர் படைத்திருக்கிறார். அவருக்கும் பொருளாசை இருப்பதில்லையா? யாராவது சாமியார் இரசவாதம் செய்கிறார் என்று கேள்விப்பட்டால் அவரை நாடித் தேடி ஒடுகிறார். நீண்ட காலமாக வாழ்ந்து முதுமையை அடைந்தவர்கள் இந்த வாழ்க்கை இனிப் போதும் என்ற எண்ணம் கொள்கிறார்களா? யாராவது வைத்தியர் காயம் நிலையாக நிற்க ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று கற்பனையாக ஒரு செய்தி வந்தாலும் அந்தக் காயகற்பத்தைத் தேடிச் சென்று அது கிடைக்காமல் நெஞ்சு புண்ணாவார்கள்.

இவ்வாறு ஆசைகள் விரிந்துகொண்டே போகின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? முடியும் என்று யாராவது சொன்னால் நாம் சும்மா இருப்போமா? அவரிடம் சென்று அடிபணிந்து கெஞ்சிக் கூத்தாடி அந்த இரகசியத்தைக் தெரிந்து கொள்ள முயல்வோம்; இது மனித இயல்பு.

காரைக்கால் அம்மையார் எண்ணியவற்றையெல்லாம் பெறமுடியும் என்று சொல்கிறார். வேறு யாருக்கோ சொல்