பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75. கபாலக் கலம்


இறைவன் தன்திருக்கரத்தில் பிரமனுடைய கபாலத்தை ஏந்தியிருக்கிறான். சிவபெருமானுக்கு ஐந்து தலைகள்; பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ‘சிவனுக்கும் ஐந்துதலை; எனக்கும் ஐந்துதலை. நானும் அவனும் சமம்’ என்று பிரமன் அகங்காரம் கொண்டனன். படைத்தல் என்னும் பொறுப்பான தொழிலைச் செய்கிறவன் அவன். அத்தகைய சிறந்த பதவியில் உள்ளவர்கள் நான் என்ற அகம்பாவம் கொண்டால் அவர்கள் செய்யும் கடமைகள் தவறிவிடும். அந்தத் தொழிலைச் செய்யும்படி பிரமனுக்கு ஆணையிட்டவன் சிவபெருமான். தன் ஆணையை ஏற்றுப் பணிபுரியும் அதிகாரிகள் தம் கடமையிலே உள்ளத்தைச் செலுத்தாமல் அகங்காரம் கொண்டு நின்றால் அவர்களை அந்தப் பணியில் அமைத்த மேலதிகாரி அவர்களுக்கு உரிய தண்டனையை அளித்துத் திருத்த வேண்டும். சிவபெருமான் பிரமனுடைய அகங்காரத்தைப் போக்க எண்ணினான். ஐந்து தலை இருப்பதைக் கொண்டு அவனுக்குத் தருக்கு உண்டாயிற்று என்று உணர்ந்து அந்தத் தலைகளில் ஒன்றைக் கிள்ளினான். அதுமுதல் பிரமன் நான்முகன் ஆனான்.

கிள்ளிய தலையின் கபாலத்தைச் சிவபெருமான் தன் கையில் வைத்துக் கொண்டான். அதைக் குழிவான பாத்திரத்தைப் போலத் திருப்பி வைத்துக் கொண்டு பிச்சை வாங்கத் தொடங்கினான். அவனை வெறும் பிச்சைக்காரனென்றும் தாம் அவனுக்குப் பிச்சையிடும் பெரியவர்களென்றும் நினைத்து வருகிறவர்களின் அகந்தையையும் அவன் போக்கினான். “இறைவனே பிச்சை எடுக்கிறான். அவனுடைய பிச்சைக் கலம் நிறைய நாம் இடுவோம்” என்று