பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454

எண்ணிய பலர் அதில் சோற்றையும் பிற பொருளையும் இட்டார்கள். அது நிரம்பவே இல்லை. “இந்தக் கலம் நிரம்ப இட்டால்தான் என் பசி தணியும். அரைகுறையாக இட்டால் என் பசி தீராதே” என்று சொல்லி இறைவன் எல்லாரிடமும் பிச்சை கேட்டான். இந்திராதி தேவர்கள் தம்மிடம் உள்ளவற்றையெல்லாம் இட்டுப் பார்த்தார்கள். அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் பாதிகூட நிரம்பவில்லை. மிடுக்கோடு வந்து பொருளை இட்டவர்கள் யாவரும் திகைத்துப் போனார்கள். ‘இது என்ன? எத்தனை போட்டாலும் நிரம்பாக் குழியாக இருக்கிறதே!’ என்று அலுத்துக் கொண்டார்கள். உங்கள் சக்தி இவ்வளவுதானா? என்று கேட்டுச் சிரிப்பது போல அந்தக் கபாலம் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது.

வருணன் வந்தான். அவன் கடல்களுக்கு அதிபதி. பல வகையான கடல்கள் அவன் ஆட்சியில் இருந்தன. பால், அமுதம், உப்புநீர், கருப்பஞ் சாறு, தயிர், நன்னீர், கள் என்பவை நிரம்பிய கடல்கள் ஏழு உண்டு. அவற்றையெல்லாம் இறைவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் பெய்தான். கரையற்ற கடலில் உள்ள நீரே போதும் இதை நிரப்ப என்று எண்ணி வந்த அவன் ஒவ்வொரு கடலாகப் பெய்யப் பெய்ய, அந்தக் கலம் நிரம்பிய பாடில்லை. எத்தனை கடல்களைப் பெய்தாலும் அது சிறிதுகூட நிறையவில்லை.

ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் எய்துஅட்ட
ஏதும் நிறைந்ததில்லை என்பரால்.

‘பார்த்தால் சிறிய கபாலமாக இருக்கும் இது இத்தனையையும் விழுங்கிவிட்டு, இன்னும் கொண்டுவா, கொண்டு வா என்கிறதே!’ என்று வியந்தார்கள். இதை எவ்வாறு நிறையச் செய்வது?’ என்று மயங்கினர்கள்.

இப்படி நிகழ்ந்ததென்று அடியார்கள் சொல்லிக்கொண்டார்கள். அதைக் காரைக்கால் அம்மையார் கேட்டிருக்கிறார்.