பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

455

‘இப்படி எல்லாம் சொல்கிறார்களே; அந்தக் கலம் என்றும் நிரம்பாதோ?’ என்று எண்ணமிட்டார்.

ஆனால் அடுத்தபடி அவர் கேட்டறிந்த செய்தி அவருக்கு மிக்க வியப்பை உண்டாக்கியது.

அந்தக் கலம் நிரம்விவிட்டதாம். எப்போது, எங்கே, எப்படி?

சிவபெருமான் தாருகாவனத்து முனிவர்களின் அகம்பாவத்தை அடக்க எண்ணினான். அவர்கள் வேதமும் வேள்வியுமே போதுமானவை என்று நினைந்து இறைவனிடம் பக்தி பண்ணாமல் இருந்தார்கள். கர்மமே முக்தியைத் தரும் என்று எண்ணினர்கள். இறைவனுடைய திருவருள் இல்லாமல் எதையும் அடையமுடியாது என்ற உண்மையை அவர்கள் அறியவில்லை. அவர்களுடைய மனைவிமாரும் அவர்களுடைய எண்ணத்துக்கே ஆதரவு தந்தார்கள். அவர்களுடைய உறுதியைக் குலைக்க எண்ணிச் சிவபெருமானும் திருமாலும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார்கள். சிவபெருமான் திகம்பரனாக நின்று கையில் பிரமகபாலமாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு தாருகாவனம் சென்றான். திருமால் மோகினிக் கோலம் பூண்டு அங்கே சென்றார். சிவபெருமானுடைய மோகன வடிவத்தைக் கண்டு முனிவர்களின் மனைவிமார்கள் அவனுக்குப் பிச்சையிடுபவர்களைப் போல வந்து அவன் அழகிலே சொக்கி நின்றார்கள். அவ்வாறே மோகினியைக் கண்டு முனிவர்கள் மயங்கி நின்று பல்லை இளித்தார்கள். அவர்களுடைய மன உறுதி குலைந்துவிட்டது.

சிவபெருமானுக்குப் பிச்சையிடும் பொருட்டு முனிவர்களின் மனைவிமார் கையில் சோற்றைக் கொண்டுவந்தார்கள். இறைவனுடைய பெருமையை அறியாத பேதையராகிய அந்தப் பெண்கள், அவனுடைய அழகிலே மயங்கிக் கையில் சோறும் நெஞ்சில் மோகமும் உடையவராக வந்தார்கள். சோறிடும் பெண்களை அன்னையராகப் பார்த்தான் சிவ