பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

பெருமான். அவர்களோ அவனை அழகனாகக் கண்டார்கள். அவர்கள் இன்னது செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல், அவன் அழகிலே அறிவையே பறிகொடுத்துப் பிச்சையிட்டார்கள். அவர்கள் கண்ணிலும் கருத்திலும் இறைவனே நிறைத்திருந்தான்.

அத்தனை கடல்களையும் உண்டு இன்னும் நிரம்பாத விரிந்த இடத்தையுடைய கபாலமாகிய அந்தப் பிச்சைக் கலம் இப்போது நிரம்பிவிட்டது. என்ன் ஆச்சரியம்!

அந்த மங்கையர் தம் கணவரை மறந்து சூழ்நிலையை மறந்து நாணத்தையும் நழுவவிட்டு அரைகுலையத் தலைகுலைய இறைவன் ஒருவனையே கண்டும் கருதியும் அந்தப் பிச்சையை இட்டார்கள். எல்லாம் மறந்து தன்னையே நினைக்கும் அவர்களுடைய ஒருமைப்பாட்டை உணர்ந்த ஆண்டவனுக்கு இப்போது அருள் கனிந்தது. அவனுடைய கையில் உள்ள கபாலம் இப்போது நிறைந்துவிட்டது. இது என்ன ஆச்சரியம்!

பேதையர்கள்
எண்ணாது இடும்பலியால், என்னோ நிறைந்தவா
கண்ஆர் கபாலக் கலம்.

அந்தப் பெண்கள் அந்தக் கலத்தின் அளவை எண்ணவில்லை. அதற்குமுன் அது நிரம்பாமல் இருந்ததை எண்ணவில்லை. தாம் நாணம் இழந்து நிற்பதை எண்ணவில்லை. தம் கணவன்மார் கண்டால் சினப்பார்களே என்றும் எண்ணவில்லை. இப்படி எந்த எண்ணமும் இல்லாமல் இறைவன் கலத்தில் பிச்சை இடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சென்று இட்டார்கள். அது நிரம்பிவிட்டது.

பல கடல்களாலும் நிரம்பாத அது கீழும் மேலும் சிந்த அந்த மங்கையர் இட்ட சோற்றால் நிறைவுபெற்று விளங்குவது பெரு வியப்புத்தானே? இறைவன் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து தன்னையே எண்ணிவந்த ஒருமைப்