பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

457

பாட்டை அறிந்து அதன் பெருமையைக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்தான் போலத் தோன்றுகிறது.

ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்துஅட்ட
ஏதும் நிறைந்ததில்லை என்பரால்;—பேதையர்கள்
எண்ணாது இடும்பலியால் என்னோ நிறைந்தவா,
கண்ணார் கபாலக் கலம்!

[இடம் நிரம்ப உள்ளதும் இறைவன் திருக்கரத்தில் உள்ளதுமாகிய பிரமகபாலமாகிய பிச்சைப் பாத்திரமானது, அலைப்பெருக்கையுடைய ஆழமான கடல்கள் எத்துணையைப் பெய்து இட இட, சிறிதும் நிறைவுபெறவில்லை என்று சொல்கிறார்கள்; ஆனால் ஒன்றும் அறியாத பேதையர்களாகிய தாருகாவனத்து முனிவரின் மனைவிமார், பிச்சைப் பாத்திரத்தின் அளவையும் பிறவற்றையும் எண்ணாமல் இட்ட பிச்சையால் நிறைந்தவாறு என்ன வியப்பு!

ஓதம்-அலைகள் பெருகுவது. நெடுங்கடல்கள்—ஆழமான கடல்கள். எத்தனையும்—எவ்வளவையும்; எண்ணினால் பலவாக உள்ள எல்லாவற்றையும் உய்த்து அட்ட—பாத்திரத்தில் தள்ளி இட. ஏதும்—சிறிதளவும்; என்பர்—என்று அறிந்தோர் சொல்வர். ஆல்: அசை. பேதையர்கள்—தாம் இன்னது செய்கிறோம் என்பதை அறியாத பேதைமையை உடைய தாருகாவனத்து முனிவர்கள் மனைவிமார். எண்ணாது-பாத்திரத்தின் அளவு, தம் நிலை முதலியவற்றை எண்ணாமல். பலி—பிச்சை. நிறைந்த—நிறைந்தவாறு; விகாரம். கண் ஆர்—இடம் நிரப்பிய. கபாலக்கலம்—பிரம கபாலமாகிய பிச்சைப் பாத்திரம்.

“கபாலக் கலம் உய்த்து நிறைந்ததில்லை என்பர்; பேதையர்கள் இடும்பலியால் நிறைந்தவா என்னோ என்று கூட்டிப் பொருள் செய்க.]

அற்புதத் திருவந்தாதியில் வரும் 74-ஆம் பாடல் இது.