பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



459

இரங்கவில்லை. அது தருக்கினால் கலங்கியிருந்தது. “என்னை ஏற்றுக் கொள்வார் யார்?” என்ற அகம்பாவம் அதற்கு. அதனால் அது ‘கலங்கு புனற் கங்கை’யாக இருக்கிறது. பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவம் புரியவே, அவன் தவத்துக்கு இரங்கி அந்தக் கலங்கிய கங்கையை இறைவன் தன் சடாபாரத்தில் ஏற்றுக் கொண்டான். கலங்கிய நீர் ஓரிடத்தில் தங்கினால் அது தெளிவு பெறும். அவ்வாறு தெளிவுபெற்ற கங்கையையே பகீரதன் வேண்டுகோளுக்கு இரங்கி அவனுடைய மூதாதையர்களின் என்பின்மேல் பாயும்படி செய்தான்.

கலங்கிய புனலையுடைய கங்கை அவன் சடையினூடு அலைகளை வீசிச்கொண்டு அசைந்தது.

கலங்கு புனற்கங்கை ஊடுஆடலாலும்.

தக்கனுடைய சாபத்தைப் பெற்ற சந்திரனுக்கு அபயம் தந்து இறைவன் பிறையைத் தன் சடாபாரத்தில் எடுத்து அணிந்து கொண்டான். நல்ல இடத்தைச் சேர்ந்தமையால் அது கவலையின்றி இயங்குகிறது. அங்கேயிருந்து ஒளியை வீசுகிறது. கங்கையின் ஊடே அது இயங்குகிறது.

இலங்கு மதிஇயங்கலாலும்.

இறைவனுடைய திருமுடி உயர்ந்து விளங்கும் நீள்முடி. பலவகை நலன்களை உடையவன் இறைவன். அனந்த கல்யாண குணங்களை உடையவன். அவனுடைய நீண்ட முடியில் பாம்புகள் இயங்குகின்றன. பாம்புக்கும் சந்திரனுக்கும் பகை. இறைவன் திருமுடியின் மேல் அவை பகைமையை மறந்து குழந்தைகளைப் போலக் குலாவுகின்றன.

நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேல் பாம்பு இயங்கலாலும்.

வானில் கங்கை உண்டு; மதி உண்டு; இராகு கேதுக்களாகிய பாம்புகளும் உண்டு. இங்கே இறைவன் சடையி