பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

முன்பு இருந்தன என்றும் இப்போது இல்லாமல் ஒழிந்தன என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

இப்படி உயிர்கள் இறந்து, மீட்டும் வேறு வடிவெடுத்துப் பிறக்கும் செயல், இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கிறது. நாடக மேடையில் வேறு வேறு கோலம் புனைந்து நடிகர்கள், வேறு நாடகத்தில், முன் நாடகத்தில் இல்லாத வேறுபட்ட கோலங்களைப் புனைந்து நடிக்கிறார்கள். இவ்வாறு அவர்களை நடிக்கும்படி இயக்கும் இயக்குநர் ஒருவர் இருக்கிறார். அவர், தாமே சில பாத்திரங்களாகச் சில சமயங்களில் வருவார். பல சமயங்களில் அவர், நடிக்காமலே நாடகத்தை நடத்துவதும் உண்டு. இவ்வாறு பிரபஞ்ச நாடகத்தை நடத்துகிற ஒருவன் இருக்கிறான்.

பொம்மலாட்டத்தில் திரைக்குப்பின் இருந்து, பொம்மைகளை ஆட்டுவிப்பது போல ஆட்டுகிற சூத்திரதாரி அவன். மாயை என்னும் திரையை நீக்கி அவனைப் பார்க்க வேண்டும்.

“குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக்
 கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி
 நின்றாயே; மாயைஎனும் திரையை நீக்கி,
 நின்னையார் அறிய வல்லார்?”

என்கிறார் தாயுமானவர்.

இவ்வாறு உயிர்க்கூட்டங்களுக்கு உடம்பைக் கொடுத்துப் பிறக்கும்படி செய்கிற இறைவனே, அந்த உடம்பினின்றும் இறக்கச் செய்து, கோலத்தை மாற்றுகின்றான். அவன் எங்கும் இருப்பவன். அதனால் இறைவன் என்ற பெயர் வந்தது. இறை-தங்குதல். ‘பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணன்’ அவன். அவன் அவ்வாறு எங்கும் நிறைந்திருப்பதை நாம் காண முடிவதில்லை. ஆனாலும் பிரபஞ்சம் இயங்குவதைப் பார்க்கும் போது, 'ஜடமாகிய இதை உடனிருந்து இயக்குபவன் ஒருவன் இருக்க வேண்டும்