பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460

லும் அவை உள்ளன. ஆகவே இந்தச் சடாபாரம் விசும்பைப் போலத் தோற்றம் அளிக்கிறதாம்.

கலங்குபுனற் கங்கை ஊடு ஆடலாலும்,
இலங்கு மதி இயங்க லாலும், —நலங்கொள்
பரிசுஉடையான் நீள்முடிமேல் பாம்பு இயங்கலாலும்
விரிசடை யாம் காணில் விசும்பு.

[பல நலங்களைக் கொண்ட தன்மையையுடைய இறைவனுடைய நீண்ட திருமுடியின் மேல் கலங்கிய புனலையுடைய ஆகாசகங்கை ஊடே அசைவதாலும், விளங்கும் பிறையானது இயங்குவதாலும், பாம்புகள், உலாவுவதாலும் அவனுடைய விரித்த சடையை யாம் காணும்போது வானமாகத் தோற்றம் அளிக்கிறது.

கலங்கு புனல் என்றது, வானில் இருந்த நிலையைச் சுட்டியது. ஆடல்-அசைதல். இலங்கும் மதி-மறுவின்றி விளங்கும் பிறை; மதி என்பது முழுத் திங்களைக் குறித்தாலும் இங்கே பிறையைச் சுட்டியது; “இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை” என்பது நக்கீரர் வாக்கு. பிறைக்கு மறு இன்மையின் அது விளக்கம் பெற்றிருக்கிறது. மறுவின்மையும் தக்க இடத்தில் இருக்கும் பெருமிதமும் அந்த விளக்கத்துக்குக் காரணமாகின்றன. நலம்-உயர்ந்த குணங்கள். பரிசு—இயல்பு. நீள்முடிமேல் என்பதை முன்னும் கூட்டிப் பொருள் செய்க. அது இடைநிலை விளக்கு.

முடிமேல் கங்கை ஆடலாலும், மதி இயங்கலாலும், பாம்பு இயங்கலாலும், விரிசடை காணில் விசும்பு என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.

இறைவன் திருமுடி விசும்பைப் போலக் காட்சியளிக்கிறது என்பது கருத்து.]

அற்புதத் திருவந்தாதியில் 75-ஆம் பாடலாக அமைந்தது இது.