பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77. திருவடிக்கு வந்த தீங்கு


இறைவனுடைய திருமுடியைப் பார்த்துத் தம் கற்பனைக் குதிரையைத் தூண்டிவிட்ட காரைக்காலம்மையார், இப்போது அவனுடைய திருவடியைக் காணப் புகுகிறார். அதைக் காணும்போது அவருக்குத் தாய்த் தன்மை குமிழியிடுகிறது. ‘அடடா! இந்த அடி என்ன, இப்படி ஆகிவிட்டது!’ என்று அங்கலாய்க்கிறார்.

தன் குழந்தை சிறிது சோர்ந்தாற் போல இருந்தால், “என் குழந்தைக்கு என்ன வந்தது? இப்படி இளைத்துப் போய் விட்டதே!” என்று இரங்குவது தாயின் இயல்பு. அந்த இயல்பு அம்மையாரிடம் வெளிப்படுகிறது. அம்மையார் இறைவன் ‘அம்மையே!’ என்று அழைக்கும் சிறப்புடையவர். அவர் இப்போது உண்மையில் தாய்க்கு உரிய வாத்ஸல்யத்தோடு இறைவன் திருவடியைப் பார்க்கிறார்.

“ஆ! இந்தத் திருவடி தாமரையைப் போல எவ்வளவு அழகாக இருக்கும்! அடியார்களெல்லாம் பாதாம்புயம் என்று புகல்புகும் சரணாலயம் அல்லவா இந்தத் திருவடிகள்! தாமரையைப் போல விரிந்தும் மலர்ச்சி பெற்றும் மணமும் குளிர்ச்சியும் வனப்பும் உடையனவாக விளங்குமே இவை. இப்போது எப்படி இருக்கின்றன? பார்க்கச் சகிக்கவில்லை. கண்ணைக் குத்தும்படி காட்சி அளிக்கின்றனவே! நல்ல திருவடிகள் பொல்லாதனவாக, அந்த நல்ல தோற்றத்தை இழந்து காண்கின்றனவே! ஐயோ பாவம்!' என்ன தீங்கு வந்தது இவற்றிற்கு?” என்று உள்ளம் கரைகிறார்.