பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

463

களை அணிந்திருக்கிறார்கள்; அந்தமுடிகள் இந்த மெத்தென்ற திருவடிகளிலே படியும்படி வணங்கி விட்டுப் போகிறர்கள்.

அந்த முடிகள் மெத்தென்றா இருக்கின்றன? பசும் பொன்னால் அமைந்து மணிகளைப் பதித்த மகுடங்கள் அவை. மணிகள் பார்க்க ஒளி வீசினாலும் கற்களே அல்லவா? இறைவன் திருவடிகள் கல்லின் மேல் நடக்கவில்லை. ஆனால் தேவர்களின் முடிகளிலுள்ள கற்கள் அந்தத் திருவடிகளில் படிந்து படிந்து இந்தத் தழும்பை உண்டாக்கியிருக்கின்றன. ஒருவரா, இருவரா? முப்பத்து முக்கோடி தேவர்களும் இறைவனிடம் வந்து அவன் திருவடிகளில் முடியைச் சாய்த்து வணங்குகிறார்கள். அந்தச் செயல் அவர்களுடைய பணிவையும், இறைவனுடைய தலைமையையும் காட்டுகின்றனவானலும் அந்தத் திருவடிகளுக்குத்தான் எவ்வளவு துன்பம் நேர்ந்து விட்டது!

ஒரு வீரன் வெற்றி பெற்றதை அறிந்து அவனிடம் மகிழ்ச்சியோடு வந்து அவன் கையை மக்கள் குலுக்குகிறார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் இப்படிக் குலுக்கியதால் அந்தக் கைக்கு வலி எடுக்கிறது; சுளுக்கியேவிடுகிறது. இந்தப் பழக்கத்தைப் பற்றி ஜவஹர்லால் நேரு ஒரு முறை ஒன்று சொன்னார். “கையைப் பலரும் குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது நல்லதுதான். ஆனால் குலுக்குகிறவர்கள் பல பேர். குலுக்கப்படும் கை ஒன்றுதான். பலரும் குலுக்குவதால் கை தன் சுவாதீனத்தை இழந்துவிடுகிறது. இப்படிக் குலுக்கும் பழக்கத்தைவிட, நம் நாட்டு முறைப்படி அஞ்சலி செய்வதே மேல் என்று தோன்றுகிறது” என்று அவர்சொல்லியிருக்கிறார்.

தேவர்களெல்லாம் தம் பணிவைக் காட்டப்போய் இந்தத் திருவடிகளுக்கு அல்லவா தீங்கு வந்திருக்கிறது? அவர்கள் மிகவும் பக்தியுடன் காலில் விழுகிறார்கள். முடிகளை அவற்றின் மீது படிய வைத்து இப்படியும் அப்படியும் தலையைத் திருப்புகிறர்கள். அந்தமுடிகள் திருவடிகளையே தேய்த்துவிடுகின்றன.