பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

467

எடுத்தருளும் சேவடிக்கீழ்
என்றும் இருக்கின் றாரை

அடுத்தபெரும் சீர்பரவல்
ஆர்அளவா யினதம்மா!

(காரைக்காலம்மையார் புராணம், 61, 75.)

என்று சேக்கிழார் பாடுவார்.

அவ்வாறு ஊர்த்துவ தாண்டவம் புரிந்தருளும் ஐயனைப் பார்க்கிறார் காரைக்காலம்மையார். அவன் ஆடும் ஆட்டம் உலகத்தையே கிடுகிடுக்க வைக்கிறது. சுழன்றும் வளைந்தும் விளையாடும் குழந்தையைப் பார்த்து அதன் மேனி அலசுமே என்றும், எங்காவது முட்டிக் கொள்ளுமே என்றும் அஞ்சும் அன்னையைப் போல அம்மையார் இப்போது கவலைப்படுகிறார். “சுவாமி, தாங்கள் சிறிது நிதானமாகவே ஆடுங்கள். உங்கள் ஆட்டத்தால் விளையும் விளைவுகளைச் சற்றே திருவுள்ளங் கொண்டு மெல்ல ஆடுங்கள்” என்று சொல்ல வருகிறார்.

“நீங்கள் ஆடும் இந்த அரங்கு உங்கள் திருநடனத்தைக் தாங்காது; ஆகவே மெல்ல ஆடுங்கள்” என்கிறார்.


அடிகள்! அறிந்து ஆடும்;
ஆற்றாது அரங்கு.

விசிறி ஆடினால் என்ன ஆகும்? அதைச் சொல்கிறார்.

“நீங்கள் உம்முடைய அடிகளைப் பெயர்த்து வேகமாக ஆடினால் அடியில் உள்ள பாதாள உலகம் நிலைபெயரும். இதனை அறிந்து மெல்லவே ஆடுங்கள்.”

அடிபேரின் பாதாளம் பேரும்.

“உம்முடைய திருமுடி அசைந்து பெயர்ந்து ஆடினால் மேலே உள்ள வானத்தின் உச்சியே தகர்ந்துவிடும். இதை உணர்ந்து ஆடுங்கள்.”