பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468


முடிபேரின் மாமுகடு பேரும்.

“தேவரீர் கைகளில் கடகங்களை அணிந்திருக்கிறீர்கள். எட்டுத் தோள்கள் இருக்கின்றன. அந்த எண்டோளையும் வீசி இன்று ஆடும் பிரான் நீங்கள். கைவளைகள் மேலும் கீழும் மறிந்து ஆடும்படி உங்கள் நடனம் அமைந்தால் பெருமையுடைய திசைகளெல்லாம் பெயர்ந்து மாறிவிடும். ஆகவே இதனை அறிந்து ஆடுங்கள்.”


கடகம்
மறிந்து ஆடு கைபேரின்
வான்திசைகள் பேரும்.

“அடியினால் பாதாளமும், முடியினால் வான் முகடும், கைகளால் திசைகளும் நிலை பெயர்ந்து விடுமானால் உலகம் என்னாகும்? இந்த விளைவை எண்ணியும், தேவரீர் ஆடும் இந்த அரங்கு தங்கள் ஆட்டத்தைத் தாங்காமல் குலையும் என்பதையும் நினைந்து, மெல்ல ஆடுங்கள்.”


அடிபேரின் பாதாளம் பேரும்; அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும்; — கடகம்
மறிந்துஆடு கைபேரின் வான்திசைகள் பேரும்;
அறிந்து ஆடும்; ஆற்றாது அரங்கு.

“சுவாமி, நீங்கள் தாண்டவம் புரியும்போது தங்கள் திருவடி வேகமாகப் பெயர்ந்து சதி மிதித்தால் கீழே உள்ள பாதாள உலகம் நிலைபெயரும்: தேவரீர் திருமுடி பெயர்ந்து வேகமாக ஆடினால் பெரிய வானத்தின் உச்சியிலே அது முட்டி அந்த வானம் பெயர்ந்து விடும்; வளைகள் மாறி மாறி ஆடும் திருக்கரங்களை வீசி ஆடினால் பெரிய திசைகளே தம் நிலையிலும் குலைந்து மாறிவிடும்; ஆகவே இவற்றையெல்லாம் அறிந்து நடனம் புரிந்தருள்வீர்களாக; இந்தச் சிறிய நடன அரங்கு தேவரீருடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தாங்காது. நிலை குலைந்து போகும்.”