பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

469

[நடனமிடும்போது திருவடிகளைச் சதிக்கு ஏற்ப மிதித்து ஆடுவார்கள். கால்கள் பெயர்ந்து பெயர்ந்து மிதிக்கும். அவ்வாறு அடிகளைப் பெயர்த்து வைக்கும்போது அவற்றின் ஆற்றலைத் தாங்க மாட்டாமல் பாதாளம் பெயர்ந்து நிலை குலையுமாம்.

அடிகள்-சுவாமியே; விளி. அடிகளுடைய முடி என்றும் கொள்ளலாம். அப்போது அதனை அடிகள் அடி, அடிகள் கை என்று பிறவற்றோடும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

தலையை அப்படியும் இப்படியும் பெயர்த்து ஆடுதல் நடனமிடுவோருக்கு இயல்பு. அவ்வாறு ஆடும்போது பெரிய வானத்தின் உச்சி பெயர்ந்துவிடுமாம். மாமுகடு -பெரிய உச்சி; வானம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி அகலிரு வானமாக இருத்தலின் அதன் உச்சி, ‘மாமுகடு’ ஆயிற்று.

ஆடுபவர்களின் கைகளில் அணிந்த வளையல் குலுங்கி நடனத்துக்குத் தாளம் போடுவது போல மாறி மாறி ஒலிக்கும். அசையும்போது அவற்றிலுள்ள கடகங்கள் மேலும் கீழும் மறிந்து குலுங்கும். அதனால் பெரிய திசைகளெல்லாம் பெயர்ந்து விடுமாம். மறிந்து-மாறி மாறி அமைந்து. கடகம்–ஆடும் கை. வான்-பெருமை. அறிந்துஇந்த விளைவுகளையெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு. ஆடும்-ஆடுவீராக. அரங்கு ஆற்றாது-தேவரின் ஆடுவதற்கு நிலைக்களமாகிய அரங்கமே தங்கள் ஆட்டத்தைத் தாங்காது.

‘பாதாளம் பேரும்; மாமுகடு பேரும்; திசைகள் பேரும்; அரங்கு ஆற்றாது; இவற்றை அறிந்து அந்த நிலைகுலைவு உண்டாகாமல் ஆடுங்கள்’' என்றபடி. அரங்கு; ரங்கம் என்ற ஆரியச் சொல் அரங்கம் என்று தமிழ் வடிவம் பெற்று, அது பின்னும் திரிந்து அரங்கு என்று ஆயிற்று.]

இறைவனுடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்த அதிசயத்தால் பாடியது இது.

அற்புதத் திருவந்தாதியில் வரும் 77-ஆம் பாடல் இது.