பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


79. எல்லாம் கிடைக்கும்


இவ்வுலகில் உள்ள மக்களைச் சார்ந்து பணிந்து இரந்தால் அவர்கள் நமக்கு வேண்டியதை உதவக்கூடும். மனம் பொருந்தாமல் இருந்தால் உதவாமலும் இருப்பார்கள். சிலருக்கு மனம் இருந்தாலும் நமக்கு வேண்டிய பொருள் அவரிடம் இல்லாமல் இருந்தால், அவரால் நமக்கு ஒரு பயனும் இராது.

உலகில் உள்ள யாவருமே குறைவுடையவர்கள். தேவர்களும் குறை உடையவர்களே. இந்திரன், பிரமன் ஆகியவர்களும் குறை உடையவர்களே. இறைவன் ஒருவனே குறைவிலா நிறைவை உடையவன். அவன் திருவுள்ளம் இரங்கினால் எதைக் கேட்டாலும் தரவல்லவன். அவனைப் போன்ற வள்ளன்மை உடையவர் யாரும் இல்லை. எல்லாப் போகங்களையும் அவனால் வழங்க முடியும். எத்தகைய இன்பங்களிலும் சிறந்ததாகிய முக்தியின்பத்தை அவன் ஒருவனால்தான் தர முடியும். அவனுடைய திருவுள்ளம் இரங்கி அருள் சுரக்கப் புகுந்தால், அந்த அருளால் உண்டாகாத நலமே இல்லை.

அவன் மயானத்தில் ஆடுகிறான். தனக்கு நடன சாலையாக அரங்கமாக, பேய்கள் நிறைந்த சுடுகாட்டைக் கொண்டிருக்கிறான் அவன். அவனை நினையாதவர்களும் அவனை வெறுப்பவர்களும் கூட அங்கேதான் போகவேண்டும். எல்லாரும் இறுதியில் வந்து சேரும் இடத்தில், மக்கள் பிறந்து இறந்து வந்து சேரும் சுடுகாட்டில், அவன் ஒருவனே என்றும் அழியாத பெருமானாக விளங்குகிறன். அங்கே அவன் நடனம் புரிகின்றான்.

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான்.