பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

473

அவ்வாறு இரங்குவானானால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளுக்கு அளவே இராது. அவன் நம்மை மிக உயர்ந்த பதவியிலே வைப்பான். இந்திரபதவி, பிரமபதவி, திருமால் பதவி முதலிய உயர்ந்த பதவிகள் கிடைக்கும். எந்தப் பதவியில்தான் அவனால் வைக்க முடியாது?

குடங்கை நீரும் பச்சிலையும்
இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவணையும்
தருவாய் மதுரைப் பரமேட்டி.

என்பது திருவிளையாடற் புராணம். தன்னை அபிடேகம்செய்து அருச்சித்து வழிபடுகிறவர்களுக்குப் பிரம பதவியையும் அவன் தருவான். அவன் நினைத்தால் எதைத்தான் தரமுடியாது?

இரங்குமேல்
என்ஆக வையான்தான்?

அவன் இந்த உலகத்தில் நுகரும் சுகபோகத்தைத் தருவான். தேவலோகத்தை வழங்குவான்; அதன் அரசுரிமையையே தந்துவிடுவான். வேறு எந்த உலகமாக இருந்தால் என்ன? அவன் தரமாட்டானா?

எவ்வுலகம் ஈந்து அளியான்?

ஈவதுமட்டும் அன்று; அப்படி ஈந்த பதவியில் எந்தப் பகையும் வராமல் நம்மைப் பாதுகாப்பான். “நாம் இவனுக்கு உயர்ந்த பதவியைக் கொடுத்துவிட்டோமே. இனி இவன் சுகமாக இருக்கட்டும்” என்று சும்மா இருந்துவிடமாட்டான். அந்தப் பதவியில் இடையூறு சிறிதும் வராமல் நம்மைக் காத்து நிற்பான். நமக்கு வேண்டிய உலகத்தை ஈந்து, பிறகு, அளிப்பான் பாதுகாப்பான்;