பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

475


இருப்பவராக. தான்—அவன். என்னாகத்தான் வையான், எவ்வுலகந்தான் அளியான் என்று இரண்டிடத்திலும் கூட்டிப் பொருள் செய்வதும் பொருந்தும். ஈதலும் அளித்தலும் வேறு வேறு செயல்; ஈதல் வழங்குவதைக் குறித்தது; அளித்தல் பாதுகாப்பைக் குறித்தது.

விலை உயர்ந்து பொருளைக் குழந்தையிடம் அளித்த அன்னை அது பறிபோகாமல் அந்தக் குழந்தையின்பால் ஒரு கண் வைத்துக் காவல் செய்வது போன்றது இது. பன்னாள்: நாள் என்றது தினத்தைக் குறியாமல் காலம் என்னும் பொதுப் பொருளைக் குறித்தது.

பல்லூழி காலம் பயின்றரனை அர்ச்சிக்கின்
நல்லறிவு சற்றே நகும்.

என்பராதலின் பலகாலம் செய்யும் முயற்சியினால்தான் மேலான பயன் கிடைக்கும் என்று குறிப்பித்தார்.

இறைவனை இடைவிடாது பணிந்து வழிபட்டால் எல்லா வகையான பதவிகளும் கிடைக்கும் என்பது கருத்து.]

அற்புதத் திருவந்தாதியில் வரும் 78-ஆவது பாடல் இது.