பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


80. அடியவர்களின் பெருமிதம்



இறைவனுக்கு ஆட்பட்ட அடியவர்களுக்கு அச்சம் என்பதே இராது. மரணத் துன்பத்துக்கும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள்.

"யாம்ஆர்க்கும் குடி அல்லோம்;
யாதும் அஞ்சோம்;
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை."

என்ற பெருமிதத்தோடு இருப்பார்கள். பெரிய செல்வர் ஒருவரை நெருங்கிய நண்பராகப் பெற்றவர் அந்த நட்பினால் மிகவும் தைரியத்தோடும் ஊக்கத்தோடும் வாழ்வார். எந்த இன்னல் வந்தாலும் அவரால் போக்கிக் கொள்ளலாம் என்ற உறுதிப்பாடு அவரிடம் இருக்கும்.

மனிதர்களின் நட்புறவினாலே இப்படி ஒரு மனத்திண்மை வருகிறதென்றால் எல்லாம் வல்ல இறைவனுடைய அருட்பலத்தைப் பெற்றவர்கள் கொள்ளும் மிடுக்குக்கு உவமையே இல்லை.

"நாவலித் துழிதர் கின்றோம்
நமன்தமர் தலைகள் மீதே"

என்ற வீறாப்பை அவர்களிடம் காணலாம்.

காரைக்காலம்மையார் இத்தகைய உள்ளத் திண்மையை உடையவர். அவரோடு கொஞ்சம் பேசலாமா?

“அம்மையாரே, உங்களுக்கு இவ்வளவு செருக்கு இருக்கிறதே! உங்களுக்கு அச்சம். சிறிதும் இல்லையா?" என்று நாம் கேட்கிறோம்.