பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

479

“பிறகு?”

“இவ்வாறு இறைவனை வழிபட்டதோடு நிற்கவில்லை இந்த மனம். ஒரு சமயம் இருப்பதுபோல் மற்றொரு சமயம் இருப்பதில்லை. இறைவன் திருவடிகளைப் போதால் புனையும் போது மனம் தெளிவாக இருக்கிறது. வேறு சில சமயங்களில் இது சோர்வடைகிறது. தொடர்ந்து இறையுணர்வோடு இருப்பதற்கு என்ன வழி என்று பார்த்தோம். ஒரு வழி கிடைத்தது.”

"என்ன வழி அது?”

"மனித மனம் சார்பினால் உயர்வதும் தாழ்வதும் செய்கிறது. எந்தச் சூழ்நிலையில் நாம் இருக்கிறோமோ, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி இது மாறுகிறது பெரிய விளக்கை ஏற்றி நடுத்தெருவில் வைத்தால் காற்றினால் அலைப்புண்டு அது அணைந்து போகும். எவ்வளவு எண்ணெய் விட்டிருந்தாலும் காற்றின் தாக்குதலுக்கு எதிரே அந்த விளக்கு நிற்பதில்லை. இந்த உலகத்தில் எத்தனையோ மாயாசக்திகள் இருக்கின்றன. தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகாமல் அவை தடுக்கின்றன. ஒருகால் கடவுள் உணர்வு சிந்தையில் எழுந்தாலும் உலக விவகாரங்கள் அந்த உணர்வைக் குலைத்து விடுகின்றன. ஆகையால் அதற்குரிய பாதுகாப்பைத் தேடிக்கொண்டாலன்றிக் கடவுளுணர்வு நிலையாக நில்லாது."

"நீங்கள் எந்தப் பாதுகாப்பை நாடினீர்கள்?"

“நல்லோர் இணக்கத்தை நாடினோம். இறைவனுடைய திருவடிக்கு அருச்சனை செய்து வாழும் தொண்டர் கூட்டத்தில் சேர்ந்தோம். அவர்களைத் துதித்து அவர்கள் கூட்டத்தில் ஒருவராகச் சேர்ந்து கொண்டோம். அவர்களோடு சார்ந்தமையால் எம்மை அறியாமலே நல்ல பழக்கங்கள் எம்மிடம் உண்டாயின. சுற்றுச் சூழ்நிலை முழுதும் ஆண்டவனுக்கு அடிமையாகித் தொண்டு புரியும் இயல்பே அமைந்ததனால், வேறு எந்த நினைவும் இடையே புகுவதற்கு இடம் இல்லாமல்