பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உயிர்க்கூட்டங்கள் அறியாமை நீங்கி மெய்யறிவு பெற்று உய்ய வேண்டும் என்பதற்காக இறைவனும் எவ்வளவோ நலன்களைச் செய்திருக்கிறான். அறிவுமிக்க மனிதப் பிறவியை அளித்து, இனிப் பிறவாத நிலையை அடைவதற்கு ஏற்ற வழிகளை நல்லோர்களின் வாயிலாகக் காட்டுகிறான். நல் வழியில் நடவாத உயிர்களுக்குத் துன்பம் தந்து ஒறுக்கிறான்.

தந்தை, தான் பெற்ற செல்வத்தைத் தன் மக்களுக்குக் கொடுக்க விரும்புவான். இறைவனும், தன் அருளாகிய செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்கச் சித்தமாக இருக்கிறான். பொல்லாத குழந்தைகள், தந்தையை விட்டுப் பிரிந்து இன்னல் உறுவதைப் போல அறியாமை உள்ளவர்கள், இறை நெறியினின்றும் விலகி இடர்ப்படுவார்கள்.

இந்த உலகில் துன்பம் உண்டாவது இயற்கை.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்”

என்பது மணிமேகலை. துன்பம் வரும் போது, அதை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாவதும் இயல்பு. “துன்பம் இன்றி இன்பம் பெற்று வாழவேண்டும் என்றே யாவரும் விரும்புகிறார்கள். விரும்புவது வேறு; அதற்காக முயன்று அதை அடைவது வேறு. எளிதாகப் பணம் சம்பாதிக்கத் தவறான வழிகளில் புகுகிறவர்களுக்கு இறுதியில் தண்டனையே கிடைக்கிறது. அதுபோல உரிய வழியில் போகாமல் பெற்ற உடம்பையும் வாழ்நாளையும் நேரிய முறையில் ஈடுபடுத்தாமல் இன்பத்தை நாடிப்போகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே கிடைக்கிறது. ‘யாரை அடைந்தால் நம் துன்பம் நீங்கும்?’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் யாவரும் குறை உடையவர்களே. அந்தக் குறைகளில் சிறிது, பெரிது என்ற வேறுபாடு இருக்கும். இருந்தாலும் குறை குறைதானே? குறை இருக்கும் வரையில், மனநிறைவு இராது; துன்பம் நீங்காது; கவலையே இருக்கும்.